பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்வுக்கு முன்பே கேள்வித்தாள் வெளியாகவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்ததையடுத்து, அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து வேலைகளும் நடந்தன. தேர்வு மையங்களும் ஒதுக்கப்பட்டன. ஆனால், மிக தொலைவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதால், அதை மாற்றக் கோரி தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர். இதன் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஆன்லைன் வாயிலாக நேற்று முன்தினம் (டிசம்பர் 8) தொடங்கியது.
இந்த நிலையில் டிசம்பர் 8ஆம் தேதி மாலையில் நடைபெற்ற ஆங்கிலப் பாடப்பிரிவுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளிவந்ததாக வாட்ஸ்அப்பில் தகவல் வெளியானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தேர்வு நடைபெறுகிறது. இதனால் மீண்டும் தேர்வு ரத்து செய்யப்படுமோ என்று தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிர விசாரணை மேற்கொண்டது. இதுகுறித்து தெளிவான விசாரணை நடத்தப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும். அதுவரை தேர்வர்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியானதாக வெளிவந்த செய்தி குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்படும் வினாத்தாள், ஒவ்வொரு தேர்வருக்கும் மாறுபடும். ஒரு தேர்வருக்கு வழங்கப்படுவதுபோல மற்றொரு தேர்வருக்கு இருக்க 100 சதவிகிதம் வாய்ப்பில்லை. மேலும் இதில் மிகக் கடுமையான பாதுகாப்பு அம்சங்களும் பின்பற்றப்படுகின்றன. தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு எழுதி பார்க்க வெள்ளைத்தாள் மற்றும் பேனா அல்லது பென்சில் வழங்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பூர்ணிமா தேவி என்பவர் வெள்ளைத் தாளினை பயன்படுத்தி கேள்வித்தாளில் உள்ள கேள்விகளை எழுதி அதனை மையத்தில் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்று வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட கையினால் எழுதப்பட்ட எட்டு பக்கங்களில் உள்ள வினாக்களின் வரிசை எண் வினாக்கள் மற்றும் விடைகளும் (Options) தேர்வருக்குத் தேர்வின்போது கணினியில் வழங்கப்பட்ட வினாத்தாளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் அனைத்து வினாக்களும் ஒன்றாக உள்ளன.
விடைகளும் வரிசை மாறாமல் அப்படியே உள்ளது. ஒவ்வொரு தேர்வருக்கும் தனித்தனி வினாக்கள் வழங்கும் நிலையில் இத்தேர்வருக்கு வழங்கப்பட்ட வினாக்களை மையத்தில் பெற்ற கூடுதல் வெள்ளைத்தாள்களில் எழுதி எடுத்துச் சென்று தேர்வுக்குப் பிறகு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதை அறிய முடிகிறது. மேலும் வினாத்தாள் தேர்விற்கு முன்பே வெளியாகவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விதிகளை மீறிய குற்றத்திற்காக தேர்வர் பூர்ணிமாதேவி மீது வாழ்நாள் தடை நடவடிக்கையும், தவறான தகவல்களைப் பரப்பியவர் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கையும், அவதூறு வழக்கு நடவடிக்கையும் எடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பாடப்பிரிவுக்கான தேர்வு நடந்த நிலையில், இன்று வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல் இன்ஜினீயரிங் பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வு மையங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் தலைமை அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,”