பத்தாம் வகுப்புக்கான தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்க இருந்த பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, தேசிய ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில், தேர்வை நடத்தப் பள்ளிக்கல்வித் துறை தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இன்று (ஏப்ரல் 20) செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும். இதன் மதிப்பெண் தான் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். மே 3ஆம் தேதிக்குப் பிறகு தேர்வு தேதிகள் தொடர்பான அட்டவணை வெளியிடப்படும். ஒருநாள் விட்டு ஒரு நாள் தேர்வு நடத்தப்படுவது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிடப்படும். மாணவர்கள் பாதுகாப்புக்கு, தேர்வு எழுதும் போதும் இடைவெளி கடைப்பிடிக்கப்படும்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டன. இறுதி தேர்வில் பல மாணவர்கள் பங்கேற்காத சூழ்நிலையில், விடுபட்ட மாணவர்களுக்கு வேறு ஒரு தேதியில் தேர்வு வைக்கப்பட்டும். விடைத்தாள் திருத்துவதற்கான அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
தனியார் பள்ளிகள் கட்டாயமாகக் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
**-கவிபிரியா**�,