வன ஊழியரை தாக்கிய சிறுத்தை: பிடிக்கும் பணி தீவிரம்!

public

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தோட்டத்துக்குள் பதுங்கி இருக்கும் சிறுத்தை இதுவரை ஐந்து பேரை தாக்கியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் நீலகிரி மாவட்டத்தில் டி23 புலி 22 நாட்களாக வனத் துறையினருக்கு போக்குக் காட்டி அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. எப்படியோ ஒருவழியாக 23 ஆவது நாள் டி23 புலியை வனத் துறையினர் பிடித்தனர். சமீபத்தில் கோவை குனியமுத்தூர் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை ஒன்று ஐந்து நாட்கள் காத்திருப்புக்கு பிறகு பிடிபட்டது. தற்போது, அவிநாசியில் சிறுத்தை ஒன்று மக்களை அச்சுறுத்தி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பாப்பாங்குளத்தை சேர்ந்தவர் வரதராஜன்(63). நேற்று இவரும், மாறன் என்பவரும், சோளத்தட்டுகளை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோளக்காட்டுக்குள் இருந்து திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை, வரதராஜனை தாக்கியது.

இதில் அவரின் தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்த மாறனையும் தாக்கிவிட்டு மீண்டும் சிறுத்தை சோளக்காட்டுக்குள் பதுங்கியது.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் அங்கு ஓடி வந்து, சோளக்காட்டிற்குள் சென்ற சிறுத்தையை தேடினர். அப்போது அங்கிருந்த சிறுத்தை மேலும் இருவரைத் தாக்கியது.

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த திருப்பூர் கோட்ட வனச்சரகத்தினர், சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கவச உடை அணிந்தபடி சோளக் காட்டிற்குள் சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை வன ஊழியர் ஒருவரை தாக்கியது. இந்த காட்சிகள் ட்ரோன் கேமிராவில் பதிவாகி உள்ளது.

சிறுத்தை பதுங்கியிருக்கும் சோளக்காட்டை சுற்றி வலை விரிக்கப்பட்டு மூன்று கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்ட வனத் துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதி மக்கள் மாலை மற்றும் இரவு அதிகாலை நேரங்களில் தனியே நடமாட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற கிராமத்திலிருந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப் பகுதி 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து வழிதவறி இந்த சிறுத்தை ஊருக்குள் புகுந்து இருக்கலாம் என்று வனத் துறையினர் கூறுகின்றனர்.

படுகாயம் அடைந்த நால்வரும் அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வன ஊழியருக்கு லேசான காயம் என்பதால் அங்குள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.