இடதுசாரி இந்தியதேசியமும், ஜிப்ஸி திரைப்படமும்

Published On:

| By Balaji

சுப குணராஜன்

தலையில் காவி முண்டாசோடு, கண்களில் கொலைவெறி தகிக்க, கைகளை உயர்த்தி விரித்தபடி இருக்கும் ஒரு மனிதனின் படம் குஜராத் இஸ்லாமிய இனஅழிப்பு நடவடிக்கையின் சின்னமாக இன்றும் நம் கண்முன் வந்து நிற்கிறது. அதே போல தரையில் கைகூப்பியபடி உயிர் தப்பிக்க வேண்டி, பயம் உறைந்த கண்களோடு மண்டியிட்டிருப்பவரான ஒரு இஸ்லாமியர் படம் அந்த சங்பரிவார் பயங்கரவாதத்தின் அடையாளச் சின்னம்.

இந்த குஜராத் இனப்படுகொலைகளின் சின்னங்களின் தாக்கமும், இவர்கள் இருவரையும் கேரளாவில் ஒரே மேடையில் சந்திக்க வைத்த கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சியும் , இயக்குநர் ராஜூ முருகன் அவர்களின் ஒரு திரைப்படத்திற்கான கதைக் கருவை உருவாக்கியுள்ளது. அந்த வகையில் ‘ஜிப்ஸி’ திரைப்படம் தமிழ்த் திரைப்படங்களில் சாத்தியமாகும் அபூர்வங்களில் ஒன்று என்றே சொல்வேன். இந்தக் கலங்க வைக்கும் சித்திரத்தை ( Images ) ஒரு காதல் கதையின் வழியாகச் சொல்ல தீர்மானித்திருக்கிறார். இந்தச் சின்னங்களை மையப்படுத்தி ஒரு திரைப்படம் என்பதே சிறப்பு. அதையும் ஜிப்ஸி என்ற நாடோடிப் பாத்திரம் வழியாக சொல்லத் துணிந்தது சிறப்பு. இன்னும் கூடுதலான சிறப்பு அந்த இஸ்லாமியரை பெண்பாலாக மாற்றிய நுட்பம்

இந்தியாவின் இந்துத்துவ தீவிரவாதம் தேசம் எனும் முகமூடி அணிந்து எழுபதாண்டுகளுக்கும் மேலாக மிதித்து துவைத்தபடி , ரத்த ஆறு பெருக விட்டபடி இருக்கும் காஷ்மீரின் மலைமுகடொன்றின் பாலத்தின் கீழ் மழைக்காக ஒளிந்திருக்கும் மனிதர்களைக் காட்சிப் படுத்தித் துவங்குகிறது. ஒருவர் குதிரைக்கார நாடோடி இஸ்லாமியர், மற்றும் இருவர் கைக்குழந்தையோடு இருக்கும் இந்து ஆணும் பெண்ணும் . மழை ஓய்ந்ததும் வெளியேறும் தம்பதியரை வாழ்த்தி அனுப்புகிறார் பெரியவர். மறுநொடியில் குண்டு மழை பொழிய , அனாதையாகிப் போகும் குழந்தை ‘ ஜிப்ஸி ‘ யாக பெரியவருடன் இந்தியாவின் வெளியெங்கும் சுற்றியலைந்து வளர்கிறான். வாலிபனும் ஆகிறான். ஒரு நதிக்கரையில் இரவு , ஜிப்ஸியிடம் உனக்கான துணையொன்றை தேடிக்கொள் என குடித்தபடி ஆடிப்பாடும் போது அறிவுறுத்துகிறார். உனக்கான ‘முகமொன்று’ வரும் அதை விட்டு விடாதே என்று சொன்னவர் இரவில் உயிர் துறக்கிறார். பெரியவர் உடலை ஆற்றின் தீரத்தோடு போக விட்டு நீரில் மூழ்கி எழுபவனுக்கு நீரிலிருந்து வரும் ஒரு பெண்ணின் உரு காட்சிப்படுகிறது. இது வரையான காட்சிகளும் இந்தக் காட்சியும் ஒரு சித்திரக்கூடத்தின் காட்சிப்படுத்தப்பட்ட பிம்பங்களாய் விரிகிறது.

பின்னர் நாடோடி தமிழ்நாட்டின் நாகூர் வந்தடைகிறான். இந்தியாவெங்கும் அலைந்து திரியும் நாடோடிகளின் உலகம் நாகூரின் சாலையோர நடைபாதையில் விரிகிறது. நாகூரில் அந்த ‘நீர் பிம்ப பெண் ‘ வஹிதா என்ற இஸ்லாமியப் பெண்ணாக கண்முன் உயிர்க்கிறாள். நாகூர் தர்காவின் புறத்தே உள்ள புர்கா கடை உரிமையாளர் மகள் அவள்.தர்கா விழாவின் ஊடக கண்களால் மட்டும் பேசியபடி காதல் மலர்கிறது. காதலும், விருப்பமில்லாத திருமணமும் அந்தப் பெண்ணை ‘ஜிப்ஸி’ யோடு பயணத்தைத் தொடரச் செய்கிறது. அது, தொடர்ந்த பயணத்தினூடாக காதலாக முழுமை பெற்று மண உறவில் முடிகிறது. திருமணம் இஸ்லாமிய முறைப்படியே காசி/ வாரணாசியில் நடைபெறுகிறது.

மண உறவு , குழந்தைப் பேறு நாடோடியை அவளது விருப்பத்தின் பேரில் வேறூன்றச் செய்கிறது. அது தேர்தல் காலம், அனைத்துக் கட்சி ஊர்வலங்களிலும் நாடோடியும் அவனது குதிரை ‘ சேகுவரா’வும் ஆடிப்பாடுகிறார்கள். தேர்தல் கால திட்டமிடப்பட்ட இந்துத்துவ பயங்கரவாதக் கலவரம், அவர்களை சிதைக்கிறது. ஒரு வன்முறை வெறியர் கும்பலில் சிக்குண்டு இறைஞ்சியழுகிறாள் வஹிதா . நாடோடியின் ‘சே’ வும் தீக்கிரையாகிறது. கலவரக்காரனாக கருதப்பட்டு , கேள்வி முறையற்ற வகையில் சிறைப்படுகிறான் ஜிப்ஸி.

சிறை மீண்டதும் , வஹிதாவை தேடியலைந்து , அவளை கோழிக்கோட்டிலுள்ள அவளது பூர்வீக வீட்டில் காண்கிறான். குழ்ந்தையும் கையுமான வஹிதா கண்ணில் நிரந்தரமாக இருப்புக் கொண்டு விட்ட உயிர்பயத்துடன் உறைந்தவளாய் இருக்கிறாள். இவர்கள் பிரிவை கோருகிறார் அப்பா, வஹிதாவும் உறைந்த அச்சத்தின் பிடியிலிருந்து அதற்கு சம்மதம் தெரிவிக்கிறாள். இவர்கள் இணைவதற்கான முன் முயற்சிகள் பலவாக விரிகிறது . இறுதியில் எப்படி இணைகிறார்கள் என்பதே கதை.

ஒரு காவியமான கதைக்களம்தான். ஐயமில்லை. நமது இடதுசாரி இயக்குனர் தோழர்களின் ஆகப் பெரிய பலவீனம் , தாங்கள் கண்டடைந்த அதிநுட்பமான கதைக் களத்தை ‘கிளிஷே’ எனும் தேய்வழக்கு கோஷங்களால் நிறைத்து, அந்தக் களத்தின் அழகியல் சாத்தியத்தை முழுமை பெற அனுமதிக்காமல் சாய்த்து விடுவது. இயல்பான கதைசொல்லியாக அறியப்படும் ராஜூ முருகன் அவர்களால் இவ்வளவு தூரம் பயணிக்க முடிந்ததே மிகச் சிறப்பே. ஆனால் குதிரை ‘சே’ துவங்கி , அணிவகுக்கும் செங்கொடிகள் வரை, எதற்காக இவ்வளவு இடதுசாரி கட்சி சார்ந்த அடையாளத் திணிப்பு. இன்றைய இந்துத்துவ தீவிரவாதத்திற்கெதிரான போரில் இடதுசாரிகள் பங்கு அவசியமானதுதான் . ஆனால் அது மட்டுமே போதாது என்பதுதானே யதார்த்தம்.

சிக்கல் இத்தோடு முடியவில்லை. இடதுசாரி இந்தியதேசியத்தின் ஆகப் பெரும் மனச்சாய்வு , இந்துத்துவ பாசிசத்தையும், இஸ்லாமிய நம்பிக்கைவாதத்தையும் ஒரே தளத்தில் வைத்துப் பார்ப்பது. அவர்களுக்கு சிறுபான்மைக் கோட்பாட்டில் முழு ஏற்பு இல்லை. எனவே முஸ்லீம் லீகும் , பாஜக வும் ஒன்றுதான். திரைப்படத்தில் கம்யூனிஸ்ட் தோழர் லால் ஜோஷ் சொல்கிறார், ‘ வஹிதாவின் அப்பா ஒரு அடிப்படைவாதி ‘ ( he is a fundamentalist)என்று . என்னளவில் திரைப்படம் தலைகீழாக விழுந்த இடம் இதுதான்( ஒரு வேளை ராஜூ முருகன் அதை கம்யூனிஸ்ட்கள் மீதான விமர்சனமாக வைத்திருப்பாரோ)

என் ஆதங்கமெல்லாம் ஒரு அதியற்புதமான படிமம் ஒன்றை கண்டடைந்த கலைஞன் , சித்தாந்தச் சிக்கலில் சிக்குண்டு போனாரே என்பதுதான். சித்தாந்தங்களை கதைகளாக்கும் முயற்சி அபத்தமானது. கதைகளினூடாக சித்தாந்தங்கள் இலை மறை காயாக ஊடாடுவதுதானே கலை.

அரசியல் மனோதத்துவவியலாளரும், சமூக சிந்தனையாளருமான அஷிஷ் நந்தி அவர்கள் ஒரு சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார் . ‘ குஜராத் படுகொலைகளின் நாயகனாக காட்சிப்படுத்தப்பட்ட பாபு பஜ்ரங்கி இப்போது மனச்சிதைவு நோயால் பீடிக்கப்பட்டுள்ளான். ‘. கலவரங்களில் ஈடுபடுபவர்களும் , வெறித்தனமான கொலைகளைச் செய்பவர்களும் அதற்கான மோசமான விலையை கொடுக்க நேர்கிறது என்பதே செய்தி. இந்த நிலையில் ‘பலியாளையே’( ‘victim )‘ மனச்சிதைவிற்குள்ளாக்குவது தவறான பார்வை. இடதுசாரி பார்வையின் சிக்கல். இந்திய இஸ்லாமியர்கள் மனச்சோர்வும், மனஅயர்ச்சியும் அடைந்துள்ளார்கள், மனச்சிதைவல்ல.

இந்தத் திரைப்படம் காலத்தே வந்து குறிதவறி தவறான இலக்கை நோக்கிப் பாய்ந்து விட்டதாக கருதுகிறேன்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share