கருச்சிதைவு ஏற்பட்டால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை!

Published On:

| By Balaji

பெண் ஊழியர்களுக்கு துரதிருஷ்டவசமாக கருச்சிதைவு ஏற்பட்டால், அவர்கள்படும் துன்பத்தைக் கருத்தில்கொண்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

அரசு அலுவலகங்களில் திருமணம் ஆன பெண்கள் குழந்தை பெறுவதற்கான சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் இது நடைமுறையில் இருந்து வருகிறது.

மேலும் பெண்கள், குழந்தைகளைப் பெறுவதைத் தவிர மற்றும் சில விஷயங்களிலும் வேலைக்கு வரும்போது கஷ்டப்படும் நிலை உள்ளது. குறிப்பாக கருவுற்ற சில வாரங்களில் துரதிருஷ்டவசமாக கருச்சிதைவு ஏற்பட்டால், அது பெண்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் மிகப்பெரிய வேதனையைக் கொடுக்கும். இந்த வேதனையுடன் அலுவலகத்துக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் அல்லது விடுமுறை எடுக்க வேண்டும். இதனால் கூடுதல் வேதனையுடன் மன அழுத்தமும் ஏற்படும்.

இதைக் கருத்தில்கொண்டு நியூசிலாந்து அரசு பெண் ஊழியர்களுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டால், அவர்களுக்கு மூன்று நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுக்க முடிவு செய்தது. இதுகுறித்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவிக்க ஒருமனதாக சட்டம் நிறைவேறியது.

இதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் கருச்சிதைவு ஏற்பட்டால், பெண்கள் மூன்று நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்பது நடைமுறைக்கு வருகிறது.

இந்தச் சட்டத்தை இயற்றி, செயல்முறைக்கு கொண்டுவரும் முதல் நாடு நியூசிலாந்தாகிறது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த தொழிலாளர் எம்.பி (Labour MP) ஜின்னி ஆண்டர்சன், ‘‘நாம் உலகில் முதலாவது நபராக இருக்கும்போது, கடைசி நபராக இருக்க மாட்டோம் என்பதை என்னால் உறுதியாக நம்ப முடியும். நம்நாட்டை பார்த்து மற்ற நாடுகளும் அதன் வேதனையை அறிந்து சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அங்கீகரிக்கும் சட்டத்தை தொடங்குவார்கள்’’ என்றார்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share