விழித்தெழும் சுகம்! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

தேர்தல் சடங்கு வருகிறது. ஜனநாயகச் சந்தை களைகட்டி விலைபேசத் தொடங்கப்போகிறது. சகல கம்பெனியார்களும் களமிறங்க சந்தைக் காட்சியின் முதல் ரீல் இனிதே ஆரம்பித்தாகிவிட்டது.

மேற்படி கம்பெனியார்களின் மறைமுக விளம்பரம் இப்படியானது…

டியர் வாக்காளர்களே வணக்கம்! எங்களிடம் மாவட்டம் தோறும் அதன் கிளைகள் தோறும் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் உள்ளன. அனைத்தும் சுயநலக் கீரைகளைத் தின்று செமித்த கொழுத்த ஆடுகள். அவை அனைத்தும் ஒருசேரக் கத்தினால் உண்டாகும் கொடுங்கழுத்து ஓசையினை மீறக்கூடியதல்ல உங்கள் நியாயக் குரல்கள். அது கிடக்கட்டும்.

நீங்களும் எங்கள் மந்தையில் ஒன்றாக முடிந்தால் நல்லது. அதற்குப் பிரதியுபகாரமாக எதையேனும் எதிர்பார்ப்பது நீங்கள் இந்தத் தமிழ் மண்ணுக்குச் செய்யும் அசிங்கம் என்று உணர்வது அதைவிட நல்லது. எங்கள் கம்பெனி ஆசைக்கு எதிராகக் கலகம் செய்வீர்களானால் உங்கள் நாக்கு மேலண்ணத்தோடு சேர்த்துத் தைக்கப்பட்டுவிடும். ஜாக்கிரதை! ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வெளியாகும் இப்படியான மறைமுக அறிவிப்பின் பின்புலம் சகல பலங்களும் கொண்டது என்பதால் அதை அசட்டை செய்துவிட முடியாது.

ஆனால், அதற்கு அடிபணிந்து கொண்டே இருந்தால் உங்கள் எதிர்காலம் ஒளிராது.

என்னதான் செய்வது?

கலகப் போராளிகள் ஒரு யுக்தி செய்வார்கள். போரின் போக்கு தங்கள் வசம் இல்லை என்று தெரிந்தால் அடுத்த கணம் ஆயுதங்களை மௌனித்துவிட்டுத் தலைமறைவாகி விடுவார்கள். காலம் கனியக் காத்திருப்பார்கள். கலகப் போராளிகளும் ஜனநாயகப் போராளிகளும் ஒரு நிறை அல்லவே.

ஜனநாயகர்களின் பேராயுதம் ஓட்டு. அந்த ஓட்டை நோட்டாவாக மௌனித்துவிடுவது சரிதானா?

நோட்டா என்பது என்ன? உங்களை அறிவுள்ள ஆடுகளாக ஏற்றுக்கொள்ளும் மற்றொரு மறைமுக கம்பெனி அவ்வளவுதானே? ஆம், அவ்வளவுதான்.

அரசியலில் எங்களை ஆள இன்றிருப்பவர் எவரும் வேண்டாம் என்று முடிவெடுக்க வாய்ப்பளிப்பதுதானே நோட்டா? யார் வேண்டும் என்று முடிவெடுக்க வல்லவர்களான உங்களை எமக்கென்று யாரும் வேண்டாம் என்ற விரக்தியோடு கூடிய கோப சக்தியாக மாற்றும் நூதனம்தானே நோட்டா?

அந்த நூதனத்துக்கு இரையாகிவிடாமல் நின்று நிதானித்து கொஞ்சம் யோசிப்போம்!

அது, பூச்சியோ புழுவோ மனிதனோ எதுவானாலும் தன் முனைப்போடு பிழைத்திருக்கத்தான் இந்த உலகம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கம் உட்பட அனைத்து அமைப்புகளிலும் இருப்பவர்கள் வெறும் மனிதர்கள்தான் என்பதை நாம் புரிந்துகொண்டாக வேண்டும்.

தன்முனைப்புள்ள மனிதர்களால் ஆன எந்த அமைப்பும் சக மனிதர்களைப் பற்றி யோசித்துவிடாது. சக மனிதர்களைப் பற்றி யோசிக்கும் தர்ம சிந்தனையுள்ளவர்கள் 2 சதமானமாக இருக்கக்கூடும். அதையும் மீதமுள்ள 98 சதமானம் அழுத்தி நசுக்காமலா விடும்?

அவ்வாறு சுற்றி நின்று எளியோரை ஏய்க்கும் தன்முனைப்பு கொண்ட தகிடுதத்த இயந்திரத்தில் சிக்கிக்கொள்ளாமல் எளிய மனிதர்கள் தங்களைக் காத்துக்கொள்வது எப்படி?

ஜனநாயகத்தில் அதற்குண்டான எளிய வழி ஒன்று இருக்கிறது.

தலைமைத் தேடல்!

கையில் காசிருக்கிறது. வயிற்றில் பசியிருக்கிறது. ஆனாலும் நல்ல ஓட்டலைத் தேடி அலைகிறோமா இல்லையா?

பெற்ற பிள்ளை உண்டு. கரையேற்றும் கடமையுண்டு. சேர்த்து வைத்த காசுண்டு. என்றாலும் நாலு பள்ளிகளை நாலைந்து கல்லூரிகளை விசாரித்துச் சேர்க்கிறோமா இல்லையா?

அட, பரம்பர சொத்தை விற்று வந்த ஈஸி பணம் கையில் இருக்கிறது என்றே வையுங்கள். நமக்கென்று, நம் சந்ததிக்கென்று ஒரு புது சொத்தை வாங்கிப் போட முடிவெடுக்கிறோம் என்றால்…

அந்த நிலம் நல்ல நிலமா? வில்லங்கம் இல்லாத நிலமா? வெள்ளத்தில் மூழ்காத மேட்டு நிலமா? காற்று வருமா? ஆபத்தென்றால் ஆம்புலன்ஸ் வருமா என்றெல்லாம் பார்த்துத்தானே வாங்குவோம்!?

அதுபோல் ஜனநாயகத்தில் தலைமையை ஆய்ந்து தேட வேண்டும்.

இதுகாறும் அதுகுறித்து நாம் யோசிக்காவிட்டாலும் கூச்சப்படாமல் இனியேனும் ஜனநாயகம் குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள முயன்றாக வேண்டும். நாற்பதாண்டுகள் மாறி மாறி எங்களை ஆண்டார்களே…! எங்களைக் கொஞ்சமேனும் கவனித்தார்களா என்று காரிடார்களில் நின்று அடுத்தவர்களை இழுத்து அங்கலாய்ப்பதில் அர்த்தமில்லை.

ஆண்டவர்களைக் கண்காணித்தோமா என்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்துகொண்டாக வேண்டும். கண்காணிக்க என்ன செய்ய வேண்டும்?

ரொம்ப சிம்பிள். மீண்டும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும். தொலைக்காட்சிகளில் வரும் டிபேட்டுகளைக் காணாமல் புறக்கணிக்க வேண்டும். கம்பெனிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தரகர்கள் உங்களை உணர்வுபூர்வமாகக் காயடித்து அறிவிறக்கம் செய்யும் பேராபத்தான நிகழ்ச்சிகள்தான் அந்த டிபேட்டுகள். பத்திரிகைகளைப் பொறுத்தவரை அது செய்தியைச் சொல்லும். அதன் எல்லை அவ்வளவே. பத்திரிகை என்பது தட்டையானது. அதன் செய்திகளைப் படித்த பின்பு நமக்கான உணர்வுகளை நாமே உண்டாக்கிக்கொள்ள முடியும். நமக்குள் எழும் அந்த நேரத்து உணர்வுகளின்படி புற அழுத்தங்கள் ஏதுமின்றி நாம் முடிவெடுத்துக் கொள்ள முடியும். அப்படித்தான் முந்தைய தலைமுறை இயங்கியிருக்கிறது. அப்படி இருந்தும் கேடு நிகழாமல் இல்லை. ஆனால், இன்று தொலைக்காட்சிகளின் டிபேட்டுகள் நம் உணர்வுகளை மொத்தமாகக் காயடித்து விடுகின்றன.

முப்பரிமாணமாக எழுந்து கம்பெனிகளின் வேட்கையை நம் மேல் திணித்துவிடுகின்றன. காட்சி ஊடகத்துக்கே உண்டான அசுர பலம் அது. தேர்தல் நேரங்களில் அந்த ஊடக அழுத்தங்களிலிருந்து விடுபட்டுப் பத்திரிகைகளை நாடுவது ஓரளவுக்குப் பலன் தந்துவிடும் என்றே தோன்றுகிறது.

இன்று மின்னம்பலம் போல தொலைபேசியிலேயே செய்திகளைப் படிக்கும் வசதி வந்துவிட்டது. அதனைப் பயன்படுத்திக்கொள்வது நலம். அதிலும்கூட பலவிதமான செய்திகள் வரும். அந்தப்படியான செய்திகளைச் சொல்பவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். இந்தக் கட்டுரை உட்பட அனைத்தும் பரிசீலனைக்கு உட்பட்டதுதான். பரிசீலிக்கும் கடமையிலிருந்து தவறிவிட்டுப் பின் வருந்தக் கூடாது.

சரி எது, பிழை எது எனத் தீர்மானிக்கும் இடத்தில் மக்களை வைத்திருக்கிறது ஜனநாயகம். அந்த வல்லமையை 1000த்துக்கும் 2000த்துக்கும் இழந்துவிடக் கூடாது. எதிரியைக் குற்றம் சாட்டிப் பிரயோஜனமில்லை. எதிர்க் கேள்வி கேட்டுவிடாதபடிக்கு அவர்கள் எதைக் கொண்டு உங்களை முடக்குகிறார்கள் என்பதை ஆழ உணர்ந்தாக வேண்டும்.

**இலவசம்!**

உங்கள் உழைப்பில்லாமல் எது ஒன்று உங்களுக்குக் கிடைத்தாலும் அது இன்னொன்றின் பிழைப்பே என்பதை உணருங்கள். ஆக்ஸிஜன் என்பது இயற்கையின் இலவசம் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அது இயற்கையின் பிழைப்பு என்பதை உணருங்கள்.

ஆம், நீங்கள் இல்லாமல் இந்த இயற்கைக்கு என்ன பலன்? ஆச்சரியப்பட மனிதர்கள் இல்லையென்றால் இமயமலை எவ்வளவு உயரமிருந்தும் என்ன பலன்?

இந்த உலகியக்கத்தின் முக்கிய அங்கம் நாம் என்றும், நமது ஒவ்வொரு செய்கையாலும் இந்த உலகம் வடிவம் பெறுகிறது என்றும் ஆழமாக நம்பத் தொடங்கிவிட்டால் உங்களிடம் இருக்கும் சக்தியை நீங்கள் மதிக்கத் தொடங்குவீர்கள். இந்த மண்ணை மன்னராட்சியின் பிடியிலிருந்தும் கொடுங்கோல் யதேச்சாதிகாரத்தின் பிடியிலிருந்தும் அன்றைய உலகளாவிய பாசிஸத்தின் கொடுக்கிலிருந்தும் விடுவிக்க மலர்ந்ததுதான் ஜனநாயகம்.

அந்த ஜனநாயகத்தின் அருமையை உணராமல் வைத்திருப்பது யார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். விலைமதிப்பில்லாத உங்கள் ஓட்டை விரயமாக்கிவிடாதீர்கள். மந்தைக் குணத்துக்கு மாறிவிடாதீர்கள். ஐந்தறிவுக்கு இறங்கச் சம்மதியாதீர்கள். தேசியம் ஜொலிக்க வேண்டும் என்பது சரிதான். கூடவே. நம் மாநிலமும் கொழித்தாக வேண்டும்.

தமிழகத்தின் நலன்களை உயர்த்திப் பிடிக்கக் கூடிய அனைவரையும் ஒன்றிணைக்கும் வல்லமை கொண்ட நல்ல தலைமை ஒன்றை ஆய்ந்தறிந்து கண்டுகொண்டாக வேண்டும். அந்த ஜனநாயகத் தேடல் இன்றினிதே தொடங்கட்டும்…! திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் முனையில் பீடா கடை வைத்திருந்த ஜீலானி பாய் சொன்ன ஓர் உருதுக் கவிதை என் நினைவுக்கு வருகிறது…

**விழித்தெழும் சுகத்தை**

**காட்டிக் கொடுக்கத்தான்**

**கரைந்தோடிக்கொண்டிருக்கிறது**

**இந்த இரவு!**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share