பாதாள சாக்கடை திட்டம்: நகராட்சி நிர்வாக செயலாளருக்கு உத்தரவு!

public

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை நிறைவேற்றாதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அய்யம்பெருமாள் என்பவர் கடந்த 2019ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கொன்று தொடர்ந்தார். அதில், “2016 சட்டமன்ற தேர்தலின் போது சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் அவர்கள் பாதாள சாக்கடை அமைப்பதாக வாக்குறுதி அளித்தார். அருகில் உள்ள புழுதிவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இங்கு செயல்படுத்தப்பட வில்லை.

இதனால் அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள செப்டிக் டேங்குகள் நிரம்பி சாலைகளில் வடிவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக அனுப்பிய மனு மீது சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், மடிப்பாக்கம் பகுதிக்கு 160 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை கிடைத்தவுடன், நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்கும். டெண்டர் பணிகளை முடிக்க 6 மாத காலமும், அதன்பின்னர் 36 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும் என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை 2020ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி பணிகள் முடிக்கப்படவில்லை என்றுக் கூறி கடந்த ஆண்டு அய்யம்பெருமாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று(ஜனவரி 13) பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மடிப்பாக்கம் தொடர்பான வழக்கில் அந்த பகுதியை தவிர மற்ற பகுதிகள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், ஆனால் நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் மடிப்பாக்கத்தில் பணிகள் ஏதும் துவங்கப்படாதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். பணிகளை முடிக்க கூடுதல் கால அவகாசம் கூட கேட்கப்படவில்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இதன்மூலம், நீதிமன்ற உத்தரவை அவமதித்தது உறுதியாவதாக தெரிவித்த நீதிபதிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்,சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் மற்றும் செயற் பொறியாளர் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 28ஆம் தேதி தள்ளிவைத்தனர்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *