மாணவரை கடுமையாக தாக்கிய ஆசிரியர்: தேடும் போலீஸ்!

Published On:

| By Balaji

அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை ஆசிரியர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகிப் பெற்றோர்களின் மனதைப் பதறவைத்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக சுவாமி ஜகஜானந்த அடிகளார், 1916இல் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரப் பகுதியில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியாகக் கல்விக் கூடங்களையும், மாணவ மாணவிகள் தங்கிப் படிக்க விடுதியையும் அமைத்தார்.

சுவாமி ஜகஜானந்தாவால் தொடங்கப்பட்ட இந்த அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு B1 குரூப் படிக்கும் மாணவர்களை, இயற்பியல் ஆசிரியர் ஒருவர் கொலை வெறித்தனமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதை பார்க்கும் பெற்றோரின் மத்தியில் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அந்த வகுப்பைச் சேர்ந்த சஞ்சாய் என்ற மாணவன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதனிடம் விசாரித்தோம்…

“நான் நான்கு ஆண்டுகளாக நந்தனார் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறேன், கொரோனா வைரஸ் தொற்றால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு செப்டம்பர் 1ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்பட்டது.

12ஆம் வகுப்பு B1 குரூப்பில் 45 மாணவர்கள் சேர்ந்தனர். அதில் ஐந்து மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. மற்ற மாணவர்களில் சிலர் இயற்பியல் வகுப்புக்கு வராமல் கட்டடித்துள்ளனர். நேற்று (அக்டோபர் 13), முதல் பீரியடில் வேதியியல் வகுப்பு முடிந்ததும், இரண்டாவது பீரியடு இயற்பியல் கிளாஸ் நடந்து கொண்டிருந்தது. நான் ரவுண்ட்ஸ் போகும்போது மாணவர்கள் முதல் பீரியடில் இருந்ததைக் காட்டிலும் குறைவாக இருந்தார்கள். எனவே, எங்கே போனார்கள் என்று தேடினோம். என்னோடு வகுப்பு ஆசிரியர் சுப்பிரமணியனும் வந்தார்.

பள்ளியின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது, இரண்டு மூலைகளில் நான்கு, நான்கு பேர் அமர்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தனர். ‘என்னாங்கடா கிளாஸ் கட்டடிச்சிட்டு வந்து செல்போனை பார்த்துட்டு இருக்கிங்க’ என்று கேட்டேன். பதில் சொல்லாமல் முழித்தனர். சரி வாங்கஎன்று வகுப்புக்கு அழைத்துப் போய் விட்டுவிட்டு ஆசிரியர் சுப்பிரமணியத்திடம் சொல்லிவிட்டு வந்தேன்.

ஆனால், இப்படி நடந்துவிட்டது. அடிக்க வேண்டியதுதான். அதற்காக இப்படி உதைப்பது என்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. விசாரணைக்கு கலெக்டர் கூப்பிடுகிறார், இன்ஸ்பெக்டர் கூப்பிடுகிறார், பிறகு பேசுகிறேன் என்று நமது அழைப்பைத் துண்டித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம், நந்தனார் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரை, பள்ளிக்கு சரியாக வரவில்லை எனக் கூறி…

ஆசிரியர் ஒருவர் சக மாணவர்கள் முன்னிலையில், முட்டிபோட வைத்து பிரம்பால் அடித்தும், மிதிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. pic.twitter.com/KxuyUToqN0

— Kᴀʙᴇᴇʀ – தக்கலை ஆட்டோ கபீர் (@Autokabeer) October 14, 2021

போலீஸ் தரப்பில் விசாரித்தோம்…

“ஆசிரியர் சுப்பிரமணியன் தனது பீரியடில் மாணவர்களை அடித்து டார்ச்சர் செய்வார்போல, அதனால் மாணவர்கள் அவர் கிளாஸ் என்றாலே கட்டடித்து வந்துள்ளனர். அப்படிதான் நேற்று அக்டோபர் 13ஆம் தேதி இரண்டாவது பீரியடு இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் வரும்போது, சஞ்சாய் உள்ளிட்ட 8 மாணவர்கள் வெளியில் இருந்துள்ளார்கள். அவர்களை இழுத்து வந்துதான் ஒவ்வொருவரையும் கோபம் தீரக் காலாலும், கையாலும், தடியாலும் கொலை வெறித்தனமாக தாக்கியுள்ளார் ஆசிரியர்.

அதில் சஞ்சாய் கடுமையாக பாதிக்கப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனிடம், போலீஸ் வாக்குமூலம் பெற்று வழக்குப் பதிவு செய்வதற்கு எந்த செக்‌ஷன் போடவேண்டும் என்று மேல் அதிகாரிகளிடம் ஆலோசனைகள் செய்து வந்தனர். காரணம் ஆசிரியரைக் காப்பாற்றும் நோக்கில் திமுக பிரமுகர்கள் சிலர் காவல்துறை அதிகாரிகளிடம் பேசிவந்ததால் காலதாமதமானது. பின்னர், ஒரு வழியாக வழக்கு பதிவுசெய்தனர். குற்ற எண் 916/2021, 294,323,324,ஐபிசி& 75 jj act r/w3(11) SC/ST(POA) பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, ஆசிரியரைக் கைது செய்யத் தேடி வருகிறோம்” என்கின்றனர்.

அடி வாங்கிய மாணவர்களில் ஒருவரிடம் பேசினோம்.

சார் என் பெயரை போட்டுடாதீங்க… அப்புறம் என்னை ஃபெயிலாக்கிடுவாங்க, அந்த வாத்தியார் சாதி வெறியர் என்பது பள்ளியில் உள்ள அனைவருக்கும் தெரியும். நேற்று அடிக்கும் போதுகூட சாதிப் பெயரை சொல்லித்தான் அடித்தார். இந்த வாத்தியார் ஈவு இரக்கம் இல்லாமல் நாயை அடிப்பதுபோல் கொடூரமாக அடித்தார். நான் காலைப் பிடித்துக்கொண்டு அடிக்காதிங்க சார் மன்னிச்சுடுங்க சார் என்று அழுதேன். அப்போது என்னை உதைத்துத் தள்ளிவிட்டு நெஞ்சிலும் வயிற்றிலும் உதைத்தார். கழியால் அடித்து உடம்பெல்லாம் வீங்கிபோயிடுச்சு, அதனால்தான் ஸ்கூலுக்கு போகவே பிடிக்கவில்லை” என்றார்.

தற்போது மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

**-வணங்காமுடி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share