முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஆமாம்.. நாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்” என சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமில்லாமல் பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்பு எழுந்தது. சீமான் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், அவரது நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்துசெய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியிருந்தது.
**சீமான் மீது புகார்**
மேலும், சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் நேற்று புகார் அளித்தனர். மேலும், சீமானை கைதுசெய்யக் கோரி டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவரும், திருவள்ளூர் எம்.பி.யுமான ஜெயக்குமார் புகார் கடிதம் அளித்தார். இதுபோல பல இடங்களில் சீமானுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
**உருவ பொம்மையை எரித்து போராட்டம்**
சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சென்னை சின்னமலை அருகே சீமானின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், போராட்டக்காரர்களை கைதுசெய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த நிலையில் சீமான் மீது விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. ஆனால், தனது பேச்சு தொடர்பாக சீமான் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
சீமான் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
�,