இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள உலகப் பணக்காரர்களின் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரும் பல முறை இந்தப் பட்டியலில் இடம் பிடித்தவருமான பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த வருடம் முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அதன் காரணமாக தனது சொத்துக்களில் ஒரு பகுதியை மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்கினார். இதன் காரணமாக அவரது சொத்து மதிப்பு குறைந்து அவர் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்த பில் கேட்ஸ் தனது வருமானத்தின் ஒரு பகுதியை உலகளாவிய அளவில் வறுமை ஒழிப்பு மற்றும் நோய் ஒழிப்பு தொடர்பான நற்பணிகளுக்கு நன்கொடையாக அளித்து வருகிறார். மேலும் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நல்வாழ்விற்காகவும் தங்களது தொண்டு நிறுவனத்தின் சார்பில் பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.
பில் கேட்ஸ்சின் ‘பில் (மற்றும்) மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை’இந்தியாவின் சில மாநிலங்களில் விவசாயம், சுகாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாடு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உலக நாடுகளில் போலியோவை ஒழிக்க 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களும், உலக சுகாதார மேம்பாட்டுக்காக 8 பில்லியன் அமெரிக்க டாலர்களும், பிற அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக 28 பில்லியன் அமெரிக்க டாலர்களும் இவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது அறக்கட்டளை மேற்கொண்டு வரும் பணிகளைப் பார்வையிடுவதற்காக இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ் மரியாதை நிமித்தமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் இந்தியாவிற்கு உள்ளதாகக் கூறி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று (நவம்பர் 17), பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்தார். பாட்னா நகரில் நடந்த இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் சுசில் மோடி மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது பேசிய அவர், பீகார் அரசு வறுமை ஒழிப்பு, நோய் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாக கடந்த 20 ஆண்டுகளாக ஆற்றிவரும் பணிகளுக்காக பாராட்டு தெரிவித்தார்.
“கடந்த 20 வருடங்களில் நோய்களையும், வறுமையையும் ஒழிக்கும் பணிகளில் சில பகுதிகள் மட்டுமே பீகாரைப்போன்று திறம்பட செயலாற்றி உள்ளது. பீகாரில் இன்று பிறந்த ஒரு குழந்தை இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த அவரது தாயுடன் ஒப்பிடும் போது, தனது ஐந்தாம் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகமாகி உள்ளது” என்று பில் கேட்ஸ் தெரிவித்ததை அவரது அறக்கட்டளை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக வளரவும், தரமான கல்வியைப் பெறவும் தொடர்ந்து செயலாற்ற உறுதியேற்பதாகவும், அதற்காக மாநில அரசாங்கத்துடன் இணைந்து செயல்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
�,”