தலைமை நீதிபதிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டம்!

Published On:

| By Balaji

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணியிட மாற்ற பரிந்துரையை மறு ஆய்வு செய்யக் கோரி உயர் நீதிமன்ற ஆவின் நுழைவுவாயில் அருகே வழக்கறிஞர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் அளித்த பரிந்துரையை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த 237 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதினர். தொடர்ந்து, இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் கவுன்சில் அசோசியேஷன் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தவிர, மூத்த வழக்கறிஞர்கள்30 பேர் கொலிஜியத்துக்கு

கடிதம் எழுதியுள்ளனர்.

எதிர்ப்பின் அடுத்தகட்டமாக, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் இன்று(நவம்பர் 15) உயர் நீதிமன்ற ஆவின் நுழைவுவாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில், தலைமை நீதிபதியின் பணியிட மாற்றத்தை திரும்ப பெற வேண்டும். ஒன்றிய அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது. நல்ல திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த அவரை சென்னை உயர் நீதிமன்றத்திலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பலகைகளை ஏந்தி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்கவில்லையென்றால், அடுத்தடுத்த கட்ட போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் செய்தியாளர்களிடையே பேசும்போது,” இன்று சஞ்ஜிப் பானர்ஜியை டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள். நாளைக்கு மற்றவர்களுக்கும் அதே டிரான்ஸ்பர் ஏன் வரக் கூடாது. தைரியமாகவும், நேர்மையாகவும் மனசாட்சிக்கு தகுந்ததுபோல் நாங்கள் தீர்ப்பை கூறினால், சஞ்ஜிப் பானர்ஜிக்கு நேர்ந்த கதி எங்களுக்கும் வந்துவிடுமோ என்று அனைத்து நீதிபதிகளுக்கும் அச்சம் இருக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளை மாற்றுவது சாதாரண விஷயமல்ல. அவர்கள் அரசியலமைப்பின் ஊழியர்கள். அவர்களை மிக அரிதாகவே டிரான்ஸ்பர் செய்ய முடியும். இப்படி அடிக்கடி டிரான்ஸ்பர் செய்துக் கொண்டிருந்தால், நீதிபதிகள் இருப்பார்கள், நீதிமன்றங்கள் இருக்காது என்பதை நான் தெளிவாக வலியுறுத்துகிறேன்.

எதன் அடிப்படையில் பணியிடமாற்றத்துக்கு கொலிஜியம் பரிந்துரை செய்தது என்பது தெரியவில்லை. அரசியல் சாசனத்தில் இல்லாத அதிகாரத்தை கொலிஜியம் பயன்படுத்தி கொண்டிருக்கிறது. நீதித் துறையில் ஹீரோக்கள் குறைவு: தியாகிகள்தான் அதிகம்.. நேர்மையான தீர்ப்பிற்காக நீதிபதிகள் பலியாடாகி கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share