சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியின் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று உயர் நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் சார்பில் அமைதி போராட்டம் நடத்தப்படவுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை மேகலாயா உயர் நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை மறு ஆய்வு செய்யக் கோரி ஏற்கனவே சென்னையிலுள்ள 237 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், இதே கோரிக்கையை முன்னிறுத்தி மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தத்தார், பி.எஸ்.ராமன், அரவிந்த் பாண்டியன், நளினி சிதம்பரம், என்.ஆர்.இளங்கோ, கபிர், வி.பிரகாஷ் உள்ளிட்ட 31 மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில், “சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கடந்த ஜனவரி 4ஆம் தேதி பதவியேற்றார். 2023ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று ஓய்வுபெறும் தேதியுடன் அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருந்தபோதிலும், பதவியேற்ற 10 மாதங்களிலேயே பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அவர் தனது பதவிக் காலத்தில், நிர்வாக மற்றும் நீதித்துறை ஆகிய இரண்டிலும் தனது செயல்பாடுகளை சிறப்பாகச் செய்து, அவர் வகித்த பதவிக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டார். கொரோனா காலத்திலும் சில ஆயிரம் வழக்குகளை விசாரணை செய்து முடித்து வைத்துள்ளார்.
இந்த நிலையில், அவர் திடீரென வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதற்கான காரணங்களை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் இத்தகைய குறுகிய பதவிக்காலம் நீதி வழங்கல் அமைப்பின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.
ஒரு புதிய தலைமை நீதிபதி ஒரு நிறுவனத்தின் நிர்வாகம், அமைப்பு மற்றும் கலாச்சாரம், மொழி மற்றும் உள்ளூர் நடைமுறைகளைப் புரிந்து கொள்ள குறைந்தபட்சம் ஒரு வருடமாவது ஆகும். அப்படி இருக்கும்போது பதவியேற்ற 10 மாதங்களிலேயே பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நீதிபதி இடமாற்றம் என்பது பொது நலன் மற்றும் நீதித் துறை நிர்வாக நலன் கருதி மட்டுமே இருக்க வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தந்த நிலையில், சஞ்ஜிப் பானர்ஜியின் இட மாற்றம் எதன் அடிப்படையில் நடைபெறுகிறது என்பது தெரியவில்லை.
பெரிய உயர் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகளை கையாளும் திறனையும் திறமையையும் கொண்ட அனுபவசாலி நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி. மேகாலயா உயர் நீதிமன்றம் போன்ற சிறிய நீதிமன்றங்களை காட்டிலும் சென்னை உயர் நீதிமன்றம் போன்ற பெரிய உயர் நீதிமன்றத்திற்கே அவரது தேவை அதிகம்.
அதனால், தலைமை நீதிபதியின் பணியிட மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது கொலிஜியம் பிரதிநிதித்துவத்தை எதிர்க்கும் செயலாகப் பார்க்க வேண்டாம். நீதி அமைப்பின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்கான வேண்டுகோளாக வைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று உயர் நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் அமைதிப் போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர்.
**-வினிதா**
�,