திஸ் ஹசாரி மோதல்: வழக்கறிஞர்கள் ஸ்டிரைக் வாபஸ்!

Published On:

| By Balaji

திஸ் ஹசாரி மோதல் தொடர்பாக, டெல்லியில் 11 நாட்களாக நடந்த வழக்கறிஞர்கள் போராட்டம் நேற்றுடன்(நவம்பர் 15) கைவிடப்பட்டது. இன்று முதல் வழக்கறிஞர்கள் மீண்டும் பணிக்கு திரும்புகின்றனர்.

கடந்த 2 ஆம் தேதி, டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் நடந்த கடுமையான மோதலில் வன்முறை வெடித்தது. இதில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு வக்கீல் படுகாயமடைந்தார். இதனையடுத்து நவம்பர் 4 ஆம் தேதியில் இருந்து மாவட்ட வக்கீல்கள், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, டெல்லியில் காவலர்கள் நவம்பர் 5ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களுடனான மோதல் விவகாரத்தில் தங்களுக்கு நியாயம் வேண்டும் எனவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வெளியே சீருடையுடன் போலீஸார் திடீரென போராட்டத்தை தொடங்கினர். 11 மணி நேரம் நடந்த இப்போராட்டம், காவல்துறை உயரதிகாரிகளின் சமாதானத்திற்குப் பின் நிறுத்தப்பட்டது.

அதே சமயம், வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து வந்தனர். போராட்டம் காரணமாக நவம்பர் 4 முதல் ஆறு மாவட்ட நீதிமன்றங்களிலும் பணியில் இருந்து விலகி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் டெல்லி மாவட்ட வக்கீல்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், அனைத்து மாவட்ட நீதிமன்றங்களின் வக்கீல்களும் நவம்பர் 20 ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்துவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதனால் முக்கியமான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன. பீகாரின் முசாபர்பூரில் உள்ள ஒரு தங்குமிடம் ஒன்றில் பல சிறுமிகளை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகக் கூறப்படும் வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 12 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று(நவம்பர் 15) டெல்லி மாவட்ட வழக்கறிஞர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்களுக்கு இந்த விவகாரத்தை தீர்க்க உத்தரவிட்டதை அடுத்து அனைத்து மாவட்ட நீதிமன்ற பார் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அலுவலக பொறுப்பாளர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து,வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுகிறோம். சனிக்கிழமை(இன்று) முதல் வழக்கறிஞர்கள் பணி மீண்டும் தொடங்கப்படும். வக்கீல்களின் பாதுகாப்புச் சட்டத்திற்கான எங்கள் போராட்டம் தொடரும், ” என்று அமைப்பின் தலைவர் மகாவீர் சர்மா கூறினார்.

இதையடுத்து, 11 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின் டெல்லி மாவட்ட வக்கீல்கள் அனைவரும் இன்று முதல் பணிக்கு திரும்புகின்றனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share