காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டையின் போது படுகாயமடைந்த சேலம் எடப்பாடியைச் சேர்ந்த ராணுவ வீரர் இன்று (ஜூன் 5) வீரமரணம் அடைந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் ராஜூரி மாவட்டம் அருகே சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் நேற்று தக்க பதிலடி கொடுத்தது. இதில் ஹவில்தார் மதியழகன் படுகாயமடைந்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து ராணுவ பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர், தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், “ஹவில்தார் மதியழகன் சேலம் மாவட்டம் ஸ்ரீரங்காய் காடு கிராமத்தைச் சேர்ந்தவர். எங்களுடைய வீரர்கள் எதிரிகளுக்கு எதிராகக் கடுமையாகப் போராடினர். இதில் படுகாயமடைந்த மதியழகன் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் துணிச்சல், உத்வேகம் மற்றும் நேர்மையானவர். அவரது உயர்ந்த தியாகத்துக்கு இந்த தேசம் எப்போதும் கடன்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அவரது உடல் அக்னூரிலிருந்து ஜம்மு வரை சாலை வழியாகவும் பின்னர் டெல்லிக்கு விமானத்திலும் கொண்டு வரப்படவுள்ளது. டெல்லியிலிருந்து கோவை வரை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஸ்ரீரங்காய் காட்டுக்கு எடுத்து வரப்படவுள்ளது. மதியழகனின் மறைவு ஸ்ரீரங்காய் காடு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
கடந்த சில தினங்களாகக் காஷ்மீர் பாக் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்று இரவு பூஞ்ச், சுந்தர்பானி, கிர்னி ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும், ராணுவ பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
**-கவிபிரியா**�,