ஸ்ரீநகர் – ஜம்மு என்ஹெச்-44 நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன. ஜம்மு, காஷ்மீர் பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து நிலச்சரிவு காரணமாக பல்வேறு முக்கிய சாலைகள் மூடப்பட்டன. மேலும், நெடுஞ்சாலையில் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள சம்ரோலியில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக சாலையின் பெரும்பகுதி அடித்துச் செல்லப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த நிலச்சரிவினால் ஏற்பட்ட சாலை பாதிப்புகளைச் சீரமைக்க குறைந்தது இரண்டு நாட்கள் ஆகலாம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பல இடங்களில் பேகர்வால் என்றழைக்கப்படும் நாடோடிகள் இந்த வெள்ளத்தால் தங்கள் கால்நடைகளையும், வீடுகளையும் இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரியாக குறைந்தது. சமீபத்திய ஆண்டுகளில் இது தான் மிக குளிரான நாள் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் புனித அமர்நாத் குகை உட்பட பள்ளத்தாக்கின் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மேலும் புனித அமர்நாத் குகைக்குச் செல்லும் வழியில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வருட யாத்திரை அடுத்த வாரம் ஜூன் 30ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரம்பானில் உள்ள பீராவில் நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த பாலமும் சேதமடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நேற்று மதியம் முதல், வானிலை சற்று சீராகி, நீர்வரத்து குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
.