uலலிதா ஜூவல்லரி கொள்ளை: நடந்ததும் நடப்பதும்!

Published On:

| By Balaji

காந்தி ஜெயந்தியன்று அதிகாலை திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் போலீஸார். திருச்சி மாநகர காவல்துறை க்ரைம் பிரிவு துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையிலான டீம் இந்தக் கொள்ளை தொடர்பான தீவிர விசாரணையில் இருக்கிறது.கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சுரேஷை தனிப்படையினர் தேடிவந்த நிலையில், இன்று காலை செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

**கொள்ளை போன நகைகள் எவ்வளவு?**

கடை மேலாளர் நாகப்பன் கொடுத்த புகாரின் பேரில் க்ரைம் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. குற்ற எண் 718/ 2019 எண் கொண்ட வழக்கின்படி தங்க நகைகள் 3,460 சவரன், (27 ஆயிரத்து, 680 கிராம்), 145 கேரட் வைரம், மற்றொரு உயர் தர வைரம் 1160 கேரட், மற்றும் 96.620 மில்லி கேரட் பிளாட்டினம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது, இதன் மதிப்பு 12.31 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

**சிபிசிஐடிக்கு மாறுகிறதா?**

கொள்ளை நடந்த அன்று மதியம் மதியம் 12.30 மணியளவில் துணை ஆணையர் மயில்வாகனன் , கடை உரிமையாளர் கிரண் குமாரிடம், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளைக் காண்பித்துள்ளார். அதைப் பார்த்த லலிதா ஜூவல்லரி ஓனர் கிரண்குமார், ‘ இந்த வீடியோவை அண்ணன் ஜாபர் சேட் (சிபிசிஐடி டிஜிபி) முன்னமே காட்டிவிட்டார்’ என்று சொல்ல திருச்சி போலீசாருக்கு ஆச்சரியம்.

சென்னையிலிருக்கும் சிபிசிஐடி டிஜிபிக்கு காலையிலேயே எப்படி தகவல்கள் கிடைத்தது என்று திருச்சி போலீஸுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அவர்களே, ‘இந்த கேசு முக்கியமானது. சிபிசிஐடிக்கு மாற்றினாலும் மாற்றுவார்கள் என்று முன்னெச்சரிக்கையாகத் தகவல்கள் சேகரிக்கச் சொல்லியிருக்கலாம். திருச்சியில்தான் ஜாபருக்கு நிறைய சோர்ஸ் இருக்கே’ என்று பதிலும் பரிமாறிக் கொள்கிறார்கள்.

**கொள்ளை நடந்த இடத்தின் முக்கியக் குறிப்புகள்**

திருச்சியில் ஜோசப் பள்ளியின் காலியிடம் சுற்றுமதில் உள்ளது. கிழக்குப் பக்கம் கொள்ளை போன ஜூவல்லரி உள்ளது. அவர் கடை சுவருக்கும் ஜோசப் பள்ளி சுற்றுமதிலுக்கும் இடையில் ஒரு சுவர் போட்டுள்ளார் குறைவான உயரத்தில். அந்த சந்தின் அகலம் ஒன்றரை அடிதான் இருக்கும். ஒருவர் பின் ஒருவர் நின்றால் பத்துபேர் நிற்கலாம் அந்த அளவுக்குத்தான் இடம் உள்ளது.

கடையின் முன்பகுதியில் ஆறு செக்யூரிட்டிகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராவது விழிப்போடு இருந்து போலீஸுக்குத் தகவல்கள் கொடுத்திருந்தால்கூட கொள்ளையைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள் கடை ஊழியர்கள்.

கொள்ளையர்கள் அந்த இடத்தை ஏன் தேர்வு செய்தார்கள், எப்படி உள்ளே சென்றார்கள் என்று விசாரணைக் குழுவில் உள்ள ஒருவரிடம் விசாரித்தோம்.

அவர்கள் ஓட்டை போட்ட இடம் மிக முக்கியமானது, பக்கத்தில் பாத்ரூம் சுவர் உள்ளது. அது எப்போதும் ஈரத்துடன் இருக்கும் அதன் பக்கத்தில், ஏசி தண்ணீர் மேலேயிருந்து வடிந்து சுவர் நனைந்து கொண்டேயிருக்கிறது, ஏசி தண்ணீரில் ஆசிட் கலந்துவரும், அந்த தண்ணீர் படும் இடத்தை ஈசியாக உடைத்துவிடலாம். இந்த விவரங்களை முருகன் நன்றாகவே அறிந்திருக்கிறான்.

ஸ்பாட்டுக்கு ஐந்து பேர் வந்துள்ளார்கள் மூன்று பேர் சுவர் உடைப்பதில் தீவிரம் காட்டியுள்ளார்கள். இருவர் வெளியில் உளவுபார்த்துக் கொண்டிருந்துள்ளார்கள். ஸ்பாட்டுக்கு வெளியில் சிலர் இருந்துள்ளார்கள்.

கையுளியால்தான் ஓட்டை போட்டுள்ளார்கள். அந்த சந்தில் சிறிய உருவம்தான் போகமுடியும், அதுவும் நல்ல பயிற்சி பெற்றவர்கள். முருகனின் உறவினர்கள் கருங்கல் பாறைகளையே உளியால் எளிதாக விரைவாக உடைத்துவிடுவார்கள். இதில் ஏசி தண்ணீரால் ஊறிப்போயிருந்ததால் இன்னும் எளிதாகத் துளையிட முடிந்திருக்கிறது.

**ஏன் அதிகம் கொள்ளையடிக்கவில்லை?**

உள்ளே வந்தவர்கள் நிறைய நகைகளை கொள்ளையடிக்க வாய்ப்பிருந்தும் ஏன் குறிப்பிட்ட பகுதியில் இருந்த நகைகளை மட்டுமே கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள்? இந்த கோணத்திலும் போலீஸ் விசாரித்து வருகிறது. போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, ‘அதிகமாக எடுத்தால் வெளியில் எடுத்துப்போகமுடியாமல் மாட்டிக்கொள்வோம் என்பதாலே அளவாக அடித்திருக்கிறார்கள். மேலும் கொள்ளையடித்ததோடு நில்லாமல் மோப்ப நாய்கள் மோப்பம் பிடிக்காத அளவுக்கு மிளகாய் பொடிகளையும் தூவிட்டு போய்விட்டார்கள்.

**மக்கள் பிரதிநிதிகளுக்கு மூக்குடைப்பு**

நகைக்கடை உரிமையாளர் அதிகாரிகளைமட்டும் அலட்சியப்படுத்தவில்லை, ஆறுதல் சொல்லவந்த அரசியல்வாதிகளையும் அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளார் என்று ஒரு சில சம்பவங்களையும் சுட்டிக்காட்டுகிறார்கள் திருச்சி காங்கிரசார்.

திருச்சி எம்பியாக இருக்கும் திருநாவுக்கரசர் கொள்ளைபோன சம்பவத்தை கேள்விப்பட்டு கடைக்குப் போய் பார்வையிடலாம் என்று நினைத்து கடை நிர்வாகி ஒருவருக்கு போன் போட்டு வருவதாக தனது உதவியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலைக் கேட்ட கடை உரிமையாளர் கிரண்குமார், ‘எதுக்குயா? அவர் வந்து என்ன செய்யபோறாரு, சரி வரட்டும், வந்துட்டு போகட்டும். அவர் வர்றதுக்கு முன்னாடியே நான் கிளம்புறேன்’ என்று புறப்பட்டிருக்கிறார்.

**விசாரணை டீம்களின் வியூகமும் வேகமும்**

கொள்ளை வழக்கு சம்பந்தமாக பொது மக்கள் நடமாட்டம் இல்லாத இடமான கே.கே.நகர் ஆயுதப்படை போலீஸார் யூனிட் வளாகத்தில் உள்ள ஏசி திருமண மண்டபத்தில் தான் டி.சி. மயில்வாகனன் தலைமையிலான டீம் தீவிரமாக விவாதித்து வருகிறது.

ஒரு டீம் மதுரையில் மூவிங்கில் உள்ளது, நேற்று அக்டோபர் 9ஆம் தேதி, ஒரு டீம் திருச்சியிலிருந்து மதுரையை எதிர்நோக்கிப் புறப்பட்டது, முக்கியமான குற்றவாளியுள்ள வீட்டு அடையாளமும் பரிமாறிக்கொண்டார்கள். எப்போதும் மாடு கட்டியிருக்கும் இடத்துக்குப் பக்கத்து வீடுதான் என்று சில அடையாளங்களும் பகிர்ந்துகொண்டார்கள்.

ஒரு சிறப்பு டீம் வெளிமாநிலத்திற்கு சென்றுள்ளது. அனைவரும் போலீஸ் வாகனத்தைப் பயன்படுத்தாமல், சொந்த போர்டு கார்களையே பயன்படுத்திவருகிறார்கள். டிசி மயில்வாகனன் இரவும் பகலும் ஏ.ஆர்,போலீஸ் திருமண மண்டபத்தில் இருந்தபடியே மானிட்டர் செய்துவருகிறார். விசாரணை அதிகாரிகளும், டீமில் உள்ள சிறப்புக் குழுவினரும் மண்டபத்துக்குள் போவதும் வருவதுமாக இருந்தார்கள்.

பிடிபட்டவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டிருக்கும் குழுவினரில் சிலரிடம் பேசியபோது, “ அய்யோ நிறையத் தகவல்களை கொட்றானுங்க. நூறு பவுன் அடித்தோம், இருநாறு பவுன் அடித்தோம், வீட்டில் அடித்தோம், வங்கியில் அடித்தோம் என்று பல இடங்கள், பல சம்பவங்கள், நாடு முழுவதும் வஞ்சனையில்லாமல் செய்திருக்கானுங்க. விசாரணை செய்யும் டிசி நல்ல மூடில் இருக்கிறார். பொதுவா இதுபோல வழக்குகளில் விசாரணை செலவுக்கு பணமில்லாம சிரமப்படுவோம். ஆனா இந்த கேஸ்ல செலவுகள் செய்த தொகையைச் சொன்னதும் கூடுதலாகக் கொடுக்கிறார் டிசி. ஆனால் எப்போது எந்த நேரத்தில் கூப்பிடுவார் என்று தெரியாது.

சில நாட்களுக்கு முன்பு நடு ராத்திரியில் டிசி போன் அடித்தார். குறிப்பிட்ட ஒரு ரோட்டைச் சொல்லி, அங்க இந்த கலர் சட்டை போட்டுக்கிட்டு ஒருத்தன் போயிட்டிருக்கான். அவனை மடக்கிட்டு வாங்க’ என்றார். அதேபோல சென்றவனை மடக்கி விசாரணைக்குள் கொண்டுவந்தோம். இப்படி இரவு பகல் பார்க்காமல் வேலை பார்க்கிறோம். அதனால் முக்கியக் கொள்ளையன் திருவாரூர் முருகனை விரைவில் திருச்சி கொண்டுவந்து எப்படி கொள்ளையடித்தான் என்பதை அவனை வைத்தே செய்து காண்பிக்கச் சொல்லுவோம்” என்றனர் நம்பிக்கையாக.

**திருச்சி போலீஸ் கமிஷனருக்கு நெருக்கடி!**

திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் அமல்ராஜுவுக்கு உயர் போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோர் மட்டுமல்லாமல் ஏற்கனவே மின்னம்பலத்தில் குறிப்பிடப்படி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வரை, ‘என்னாச்சு… அக்யூஸ்டை பிடிச்சிட்டீங்களா?’ என தொடர் விசாரிப்புகள். இதனால் குற்றவாளிகளை விரைவாகவும் முழுமையாகவும் பிடிக்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் திருச்சி கமிஷனர். விரைவில் ஓய்வுபெற இருப்பதால் யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பாமல், ‘போயிட்டிருக்கு சார். நெருங்கிட்டோம். சீக்கிரம் பிடிச்சிடுவோம்’ என்று பாசிட்டிவ் பதில்களையே சொல்லிக் கொண்டிருக்கிறார் கமிஷனர்.

**லலிதா வழக்கில் மட்டும் வேகம் ஏன்?**

திருச்சியில் கிரண்குமாருக்குச் சொந்தமான ஜுவல்லரிகடையில் கொள்ளையடித்துவிட்டார்கள் என்றதும் ஆட்சியாளர்கள் முதல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் வரை இவ்வளவு அக்கறையோடு விசாரணையில் கவனம் செலுத்துகிறார்கள்.

ஆனால், 2011ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர மையப் பகுதியாக ராஜாஜி சாலையில் உள்ள வீட்டில் ஓட்டை போட்டு, வீட்டுக்குள்ளே சென்று 75 வயதான சண்முகம் செட்டியாரை கொலைசெய்துவிட்டு, லட்சக்கணக்கான பணமும், சுமார் 80 கிலோ தங்கத்தையும் கொள்ளையடித்தபோது, இந்த ஆர்வமோ, தீவிரமோ போலீசார் காட்டவில்லை. கொள்ளையடிக்கப்பட்டதில் பாதி கூட ரெக்கவரி காட்டவில்லை. ஆனால் லலிதா ஜூவல்லரி என்றதும் இந்த பரபரப்பு, விறுவிறுப்பு” என்று அலுத்துக் கொள்கிறார்கள் பண்ருட்டி நகர வியாபாரிகள்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share