அறுசுவையான உணவில் கூட்டு என அழைக்கப்படும் காய்கறிகளும் பருப்பும் சேர்ந்து சமைக்கப்படும் உணவுக்குச் சிறப்பான இடமுண்டு. மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், குழம்பு போல தண்ணீராகவும் இல்லாமல் இடைப்பட்ட பதத்தில் சமைக்கப்படும் கூட்டு, சாப்பிடப்பழகும் குழந்தைகள் முதல் ஜீரணமாக கஷ்டப்படும் வயதானோர் வரை எந்த வயதிலுள்ளோரும் சாப்பிடக்கூடிய அருமையான சைடிஷ். இந்த வெண்டைக்காய் புளிக்கூட்டு அனைவருக்கும் ஏற்றது மட்டுமல்ல… சுவையானதுமாகும்.
**என்ன தேவை?**
வெண்டைக்காய் – 10
தோலுரித்த சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டு – ஒரு பல் (சிறியது)
இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன் (விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் சேர்க்கலாம்)
சீரகம் – கால் டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
வெண்டைக்காயைச் சுத்தம் செய்து ஒரு இன்ச் துண்டுகளாக்கவும். புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி – பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் வெண்டைக்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். பிறகு, புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்கவைத்து, நீர் ஓரளவு வற்றியதும் இறக்கவும்.
**[நேற்றைய ஸ்பெஷல்: காலிஃப்ளவர் முட்டை பிரட்டல்!](https://minnambalam.com/public/2021/03/17/1/kitchen-keerthana-cauliflower-egg-fry)**
.�,