தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: 25 மாவட்டங்களில் புதிய தளர்வுகள்!

public

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரசால் மார்ச் 24 -ஏப்ரல் 14, ஏப்ரல் 14 -மே 3, மே3 -மே 17 என மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டன. அதே சமயத்தில் கொரோனா பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி 4 ஆம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும் என்று அறிவித்திருந்தார்.

இதனிடையே, மே 14ஆம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், “ஊரடங்கு அடுத்த நிலைக்குச் செல்கிறது. ஒரேயடியாக ஊரடங்கை தளர்த்திவிட முடியாது, படிப்படியாகத்தான் தளர்த்த முடியும். ஓரே நேரத்தில் தளர்த்தினால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் மே 31 வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “

கடந்த மே 13ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 33 சதவிகித பணியாளர்கள் அளவை 50 சதவிகிதம் வரை உயர்த்தியும், சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைத் தவிரத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள ஜவுளித் தொழிற்சாலைகள் , விசைத்தறி உட்பட அனைத்து தொழிற்சாலைகள் 50 சதவிகித தொழிலாளர்களைக் கொண்டு இயங்கவும், பிற பகுதிகளில் sez, eou, exports units ஆகியவை 50 சதவிகித தொழிலாளர்களைக் கொண்டு இயங்கவும் அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ நிபுணர்கள், அமைச்சர்கள், சுகாதார வல்லுநர்கள் குழு ஆகியோருடன் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவுகளின் அடிப்படையில் இந்த வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு வரும் மே 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த கால கட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், சமுதாய /அரசியல் விளையாட்டு பொழுதுபோக்கு கல்வி கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது. அதுபோன்று மத்திய-மாநில அரசின் அனுமதி பெற்று இயக்கப்படும் ரயில், விமானம் மற்றும் பொது போக்குவரத்து மட்டும் இயக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

**12 மாவட்டங்களுக்குக் கட்டுப்பாடு**

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். தளர்வுகள் ஏதுமில்லை.

நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின் படி எந்தவிதமான தொடர்புகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிரப் பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

**25 மாவட்டங்களுக்குத் தளர்வுகள்**

கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் கீழ்க்கண்ட சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன:

இந்த மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் இ பாஸ் இல்லாமல் இயக்க தளர்வு அளிக்கப்படுகிறது.

மாவட்டத்திற்குள் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள்

அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கும் மட்டும் சென்று வர போக்குவரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் சென்றுவர இ-பாஸ் பெற்றுச் செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.

அரசுப் பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்குச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் இ பாஸ் இல்லாமல் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தமாக

பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறி தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.

**மகாராஷ்டிரா**

கொரோனாவால் மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் இருக்கிறது. 30,706 எண்ணிக்கையுடன் இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது மகாராஷ்டிரா. அங்கிருந்து தமிழகம் வரும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதால் தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.