கரூர் மாவட்டத்தின் வெள்ளியணை பகுதியில் நிலக்கடலை அறுவடைக்கு கூலியாட்கள் கிடைக்காததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தின் வழியாக காவிரி, அமராவதி என இரண்டு ஆறுகள் ஓடினாலும், அதனால் பாசன வசதி பெறும் நிலப்பரப்பு மிகவும் குறைவே. மாவட்டத்தின் தென்பகுதிகளான தான்தோன்றி, கடவூர் ஒன்றிய பகுதிகள் வானம் பார்த்த பூமியாக மானாவாரி விவசாயமே அதிக அளவில் நடைபெறுகிறது. கிணறு, ஆழ்துளை கிணற்று நீரைக்கொண்டு சிறிய அளவில் தோட்ட விவசாயமும் நடைபெறுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக பருவமழை உரிய காலத்தில் பெய்யாமல் போனதால் மானாவாரி விவசாயம் பாதிக்கப்பட்டதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தோட்டம் விவசாயமும் செய்ய முடியாமல் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது.
இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு தான்தோன்றி ஒன்றியம் வெள்ளியணை பகுதியில் ஓரளவு மழை பெய்ததுடன், திண்டுக்கல் மாவட்டம் குடகனாறு அணையிலிருந்து வெள்ளியணை பெரிய குளத்துக்கு நீர் திறந்து விடப்பட்டு, குளத்தில் ஓரளவு நீர் தேங்கியது. இதனால் சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமாக கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் இந்தப் பகுதி விவசாயிகள் நிலக்கடலை, எள், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்துள்ளனர்.
அந்த பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் போதிய அளவு விவசாய கூலி தொழிலாளர்கள் கிடைக்காமையால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். “பெரும்பாலான விவசாய கூலி தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டமான 100 நாள் வேலை திட்டத்துக்குச் சென்று விடுவதே இதற்கு காரணம்” என விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் நிலக்கடலை தற்போது அறுவடை செய்ய முடியாமல் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை நிலக்கடலை, எள், மக்காச்சோளம் போன்றவற்றின் அறுவடை பணிக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தால், அதற்கு உண்டான பங்கு தொகையை வழங்க தயாராக இருப்பதாகவும் இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் வெள்ளியணை பகுதி விவசாயிகளின் சார்பாக கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என்றும் கூறியுள்ளனர்.
**- ராஜ்-**
.