தமிழகத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் 91 பெட்ரோல் மற்றும் கியாஸ் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் கியாஸ் விற்பனை நிலையங்களை தொடங்க காவல் ஆணையர் பெயரில் போலி தடையில்லா சான்றிதழ் தயாரித்து மோசடி செய்ததாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்ததை எதிர்த்து சிவக்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் அடங்கிய அமர்வு, தமிழகம் முழுவதும் போலி சான்றிதழ் மூலம் எத்தனை பெட்ரோல், கியாஸ் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் இன்று (அக்டோபர் 1) விசாரணைக்கு வந்தபோது, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகம் முழுவதும் போலி சான்றிதழ்கள் மூலம் 91 பெட்ரோல் மற்றும் கியாஸ் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த 91 பெட்ரோல் மற்றும் கியாஸ் விற்பனை நிலையங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் போலி பெட்ரோல் மற்றும் கியாஸ் விற்பனை நிலையங்கள் மட்டுமல்லாமல், போலி தடையில்லா சான்றிதழ்கள் கொண்டு செயல்படும் மதுபான பார்களையும் கண்டறிந்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
**அரசன்**�,