சேலத்தில் 3ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் என்பவர் கணக்கு ஆசிரியராக இருந்து வந்தார். அங்கு பயிலும் 3ஆம் வகுப்பு சிறுமியிடம், அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்துத் தனது பெற்றோரிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று (செப்டம்பர் 1) அப்பள்ளியை முற்றுகையிட்டனர். சம்பந்தப்பட்ட ஆசிரியரைச் சரமாரியாகத் தாக்கினர்.
பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆசிரியர் சதீஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
அதே வேளையில், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர்களும் விசாரணை நடத்தினர். அதில், ஆசிரியர் அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனால், சதீஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
�,