பாரதிய ஜனதா கட்சி சார்பில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட ஹர்பஜன் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவில் வேட்பாளர்கள் தேர்வுக்கான மத்தியத் தேர்தல் குழு இன்று கூடுவதாக இருந்தாலும், வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி மறைமுகமாக ஒரு மாதத்துக்கு மேலாகவே நடந்து வருகிறது. சில குறிப்பிட்ட தொகுதிகளில் பிரபலங்களை நிறுத்தினால் எளிதில் வெற்றி பெறலாம் எனவும் பாஜக கணக்கு போட்டுள்ளது. அதன்படி, திரைத் துறை சார்ந்தவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என சிலரிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
கிரிக்கெட் வீரர் சேவாக்கிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியதும், அதற்கு அவர் மறுத்துவிட்டதும் செய்திகளில் வெளியானது. அதேபோல, தற்போது சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிடமும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் *தி ஹிந்துஸ்தான்* ஊடகத்திடம் பேசுகையில், “நாங்கள் ஹர்பஜன் சிங்கிடம் தொடர்பில் உள்ளோம்” என்று நேற்று (மார்ச் 15) கூறியிருந்தார். ஹர்பஜன் சிங் அமிர்தசரஸ் தொகுதியில் பிரபலமான முகம் என்பதாலும், சீக்கியர்கள் அதிகம் உள்ள பகுதி என்பதாலும் எளிதில் வெற்றி பெறலாம் என்று பாஜக தரப்பில் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு ஹர்பஜன் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக *நேஷனல் டெய்லி* ஊடகம் ஹர்பஜன் சிங்கிடம் கேட்டபோது, “பாஜக தரப்பிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டார்கள். ஆனால் அதில் ஒன்றுமில்லை. பாஜக மூத்த தலைவர்கள் யாரையும் நான் சந்திக்கவில்லை. இது அரசியலில் சேர்வதற்கான சரியான நேரமா என்று எனக்குத் தெரியவில்லை. மனதளவில் நான் தயாரானாலும், தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்யப் போதிய காலம் இல்லை” என்று கூறியுள்ளார்.
அமிர்தசரஸ் தொகுதியில்தான் கடந்த முறை அருண் ஜேட்லி நிறுத்தப்பட்டார். ஆனால் அவர் தோல்வியடைந்துவிட்டதால் இம்முறை, இத்தொகுதியைக் கைப்பற்றியாக வேண்டுமென அதற்கான பிரபலங்களைத் தேடும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அதற்கு முன்பு பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்ஜோத் சிங் சித்து 2004 மற்றும் 2009 தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தார். அவரும் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.�,