lஸ்ரீ ரெட்டியுடன் மல்லுக்கட்டும் வாராகி

Published On:

| By Balaji

நடிகை ஸ்ரீரெட்டி வாழ்க்கையை படமாக்குவது கலாச்சாரத்திற்கு எதிரானது என்று இயக்குநர் வாராகி கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் நடிக்க வாய்ப்பு தருவதாக தவறுதலான பாதைக்கு அழைத்ததாக பலரது மீதும் புகார் கூறினார் நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது ஆந்திராவில் பாதுகாப்பு இல்லையெனக் கூறி தமிழ்நாட்டுக்கு வந்து சென்னையில் தங்கி இருக்கிறார்.

ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை தமிழில் திரைப்படமாகத் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே வருகிறார். அலாவுதீன் என்பவர் இயக்குகிறார். சித்திரைச்செல்வன், ரவிதேவன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களையும் படத்தில் காட்சிப்படுத்துகிறார்கள்.

இந்தப்படத்திற்கு எவரேனும் தடை விதிக்க முற்பட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று அனைவரையும் எச்சரிக்கும் விதமாக சமீபத்தில் கூறியிருந்தார் ஸ்ரீரெட்டி. இந்த நிலையில் ஸ்ரீரெட்டி படத்துக்கு இயக்குநரும், நடிகருமான வாராகி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறியுள்ள ஸ்ரீரெட்டி வாழ்க்கையை படமாக்குவது கலாச்சாரத்துக்கு எதிரானது. அவரது கதையை படமாக எடுக்கக் கூடாது. மீறி எடுத்தால் அதை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பு வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த தலைப்புக்கு அனுமதி கொடுக்க கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய அமைப்புகளுக்குக் கடிதம் அனுப்பி இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே, நடிகை ஸ்ரீரெட்டி மீது சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் இயக்குநர் வாராகி புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரில், “நடிக்க வாய்ப்பு கேட்டு ஸ்ரீரெட்டி ஏமாற்றப் படவில்லை என்றும், அவர் விபச்சாரம் செய்துள்ளார்” என்றும் கூறி இருந்தார்.

இந்த புகாரையடுத்து ஸ்ரீரெட்டியும் தம்மை விலைமாது எனக் கூறிய வாராகி மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார். அப்போது செய்தியாளர்களிடம், வீண் விளம்பரத்திற்காக வாராகி தம்மை ஊடகங்களில் தவறாகப் பேசியதாகவும், தம்மை மிரட்டும் வகையில் பேசிய அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் தாம் விலைமாது அல்ல என்றும், தாம் பணம் வாங்கியதை வாராகி பார்த்தாரா? அல்லது அவர் பணம் பெற்றுத் தந்தாரா? என்றும் ஸ்ரீரெட்டி கேள்வி எழுப்பினார். சினிமா துறையில் தம்மைப் போல் வேறு யாரும் ஏமாறக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தவே தாம் ஏமாற்றப்பட்ட தகவலை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share