lவெளிநாட்டு மணல்: ஆட்சியர் ஆஜராக உத்தரவு!

Published On:

| By Balaji

வெளிநாட்டு இறக்குமதி மணலுக்கு பணம் வழங்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு டன்னுக்கு 2,050 ரூபாய் வீதம் 55 ஆயிரம் டன் மணலுக்கான தொகை ரூ.11.27 கோடியை, ஒரு வாரத்திற்குள் ராமையா நிறுவனத்துக்குச் செலுத்தும்படி உச்ச நீதிமன்றம் கடந்த 12ஆம் தேதியன்று உத்தரவிட்டது. வெளிநாட்டு இறக்குமதி மணலுக்குப் பணம் செலுத்த 6 வார காலம் அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியதையடுத்து, ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனாலும், இன்னும் அந்த தொகை செலுத்தப்படவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 28) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, பணம் செலுத்துவதற்குக் கால அவகாசம் அளித்தும், தமிழக அரசு ஏன் பணத்தைச் செலுத்தவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மணலுக்கான விற்பனை நடைபெற்று வரும் நிலையில், மணல் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தக் காலஅவகாசம் தேவை என்று தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் ராமையா நிறுவனம் இறக்குமதி செய்த 55,000 டன் மணலை ஒரு டன் 2,050 ரூபாய்க்கு வாங்க ஏற்கனவே தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை தமிழக அரசு தற்போது ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் அதற்கான பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தாததால், இது குறித்து விளக்கமளிக்குமாறு தூத்துக்குடி ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. வரும் அக்டோபர் 1ஆம் தேதியன்று, அவர் நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel