விதிகளை மீறி சசிகலாவுக்குச் சிறையில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்திய கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபா, தனக்கு வழங்கப்பட்ட ‘நம்ம பெங்களூரு’ விருதினைப் பெற மறுத்துள்ளார்.
கர்நாடக சிறைத் துறை டிஜிபியாக இருந்த ரூபா, கடந்த வருடம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்குவதற்காக இரண்டு கோடி ரூபாய் பரிமாற்றப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் கர்நாடக டிஜிபி சத்ய நாராயண ராவ் லாபம் அடைந்திருக்கிறார் என்றும் அப்போது தகவல்கள் வெளியாகின. இந்தப் பரபரப்பை அடுத்து புகார் கிளப்பிய ரூபா ஐபிஎஸ், சிறைத் துறையிலிருந்து மாற்றப்பட்டு ஊர்க்காவல் படைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ‘நம்ம பெங்களூரு ஃபவுண்டேஷன்’ சார்பில், ‘இந்த வருடத்துக்கான சிறந்த அரசு அதிகாரி’ என்ற வகையில் எட்டு அரசுத் துறை அதிகாரிகளை தேர்தெடுத்து விருது வழங்க முடிவுசெய்தனர். அந்த வகையில் போலீஸ் துறையில் சிறந்த அதிகாரி என்று ரூபா ஐ.பி.எஸ்.சுக்கு விருது வழங்க முடிவெடுத்தனர். இதுபற்றி ரூபாவுக்கும் தகவல் தெரித்தனர்.
இந்த நம்ம பெங்களூரு ஃபவுண்டேஷன் பாஜகவின் நியமன எம்பியான ராஜீவ் சந்திரசேகரின் நிதி உதவி பெற்று நடத்தப்படும் நிறுவனமாகும்.
அந்த அமைப்புக் கடிதம் எழுதியிருக்கும் ரூபா, “ஒவ்வொரு அரசு ஊழியரும், அரசு அதிகாரியும் பாரபட்சமன்ற தன்மையுடன் பணிபுரிய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. மேலும் அரசு அதிகாரிகள் அனைத்து அரசியல் சமூக அமைப்புகளிடம் இருந்தும் சம தூரத்தைப் பேண வேண்டும். அப்போதுதான் அரசு அதிகாரிகள் தங்கள் தூய்மையையும், வெளிப்படைத் தன்மையையும் தொடர முடியும். அதுவும் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அனைத்து அரசியல் சக்திகளிடமிருந்தும் விலகி இருக்க வேண்டிய சூழல் இன்னும் அதிகத் தேவையாகிறது. எனவே இந்தச் சூழலில் எனது மனசாட்சி என்னை இந்த விருதினைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை’’ என்று தெரிவித்திருக்கிறார்.
ரூபாவின் இந்த முடிவுக்கு வழக்கம்போல் வரவேற்புகள் குவிந்துவருகின்றன.�,