பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் நியமனத்தில் நடந்துள்ள முறைகேட்டை விசாரிக்க, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஜி.ராமகிருஷ்ணன் நேற்று ( டிசம்பர் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பொறுப்பிற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் மிகப் பெரிய அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள செய்திகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 2000 பேரில் குறைந்தது 220 பேரின் மதிப்பெண்கள் 50 மதிப்பெண்களிலிருந்து 100 மதிப்பெண் வரை வித்தியாசப்பட்டிருப்பதாகவும், அதனால் தேர்வாணையம் நேர்முகத் தேர்வை ரத்து செய்து விட்டு அனைத்து போட்டியாளர்களின் விடைத்தாள்களை வெளியிட்டு சரிபார்க்க கோரியிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. கூடுதல் மதிப்பெண்களை பெறுவதற்காக 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை தரகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ரூ. 50 கோடிக்கும் அதிகமான தொகை இவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும்” கவலை தெரிவித்துள்ள ஜி.ராமகிருஷ்ணன்,
இதேபோன்று தமிழக அரசு மேற்கொண்டு வரும் அனைத்து வகையான பணி நியமனங்கள், பணி மாறுதல்கள் உள்ளிட்ட அனைத்திலும் முறைகேடுகள் நடப்பதாகவும், தகுதியற்றவர்கள் முறைகேடாகப் பணி நியமனம் பெறுவதும், தகுதி வாய்ந்தவர்கள் நிராகரிக்கப்படுவதும் மிகப் பெரிய மோசடியாகும். இந்த முறை இது வெளிவந்துள்ளது. இதற்கு முன்பும் இப்படி முறைகேடுகள் நடந்திருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்று சந்தேகமும் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, இம்முறைகேடுகள் குறித்து உரிய முறையில் விசாரிக்க பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்” என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.�,”