நடிகை கங்கணா ரனாவத் நடிக்கும் மணிகர்னிகா படத்தில் புதிய மோதல் கிளம்பியுள்ளது.
சர்ச்சைக்குப் பெயர் போன நடிகைகளில் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள நடிகை கங்கணா ரனாவத் தற்போது ’மணிகர்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜான்சி ராணியின் வாழ்க்கை கதையான இதில் வில்லன் நடிகர் சோனு சூட்டும் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இதை தமிழில் வெளிவந்த ’வானம்’ படத்தை இயக்கிய கிரிஷ் முதலில் இயக்கினார். பின்னர் என்.டி.ஆர் பயோபிக்கில் அவர் பிஸியாகிவிட மணிகர்னிகாவை கங்கணாவே தற்போது இயக்கிவருகிறார்.
இந்நிலையில், திடீரென இந்தப் படத்தில் இருந்து சோனு சூட் விலகினார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து பேசிய கங்கணா “ நடிகர் சோனு சூட் எனது நண்பர்தான். முன்னதாக கிரிஷ் இயக்கும்போது அவரை ஷூட்டிங்கில் பார்த்தேன். அதன்பிறகு பார்க்கவில்லை. அவர் இந்தப்படத்திற்கு கால்ஷீட் கொடுக்க மறுக்கிறார். பெண் இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க அவருக்கு விருப்பம் இல்லை. அதனால்தான் இப்படி செய்கிறார்” என்றார்.
இந்தநிலையில் கங்கனாவின் இந்த பதிலுக்கு விளக்கம் அளித்துள்ள சோனு,“கங்கணா எனது தோழியே. படத்தை ஆண் இயக்குநர் இயக்குகிறாரா, பெண் இயக்குநர் இயக்குகிறாரா என்கிற பிரச்சினை இங்கே இல்லை. திறமைதான் முக்கியம். ஆகவே இது இரண்டையும் வைத்து அவர் குழப்ப வேண்டாம். பெண் இயக்குநரான ஃபாரா கான் இயக்கிய படத்தில் ஏற்கெனவே நான் நடித்திருக்கிறேன். அதனால் பெண் இயக்குனர் படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்வது தவறு” எனக் கூறியுள்ளார்.�,”