Lவயலினோடு ஒரு அறுவை சிகிச்சை!

Published On:

| By Balaji

லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் மருத்துவர்கள் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

வளர்ந்துவரும் விஞ்ஞானத்தில், அறுவை சிகிச்சைகள் அனைத்தும் தற்போது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் லண்டன் மருத்துவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சை சற்றே வித்தியாசமானது. பொதுவாக அறுவை சிகிச்சைகள் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, தன்னிலை மறந்த நிலையில் நடத்தப்படும். ஆனால் இந்த நோயாளி, கண் விழித்து கொண்டிருக்கும்போதே, படுத்துக்கொண்டு வயலின் வாசித்துக்கொண்டிருக்கும் போதே அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துள்ளனர் .

டக்மர் டர்னர் எனும் வயலின் கலைஞர் ஒருவருக்கு 2013 ஆம் ஆண்டு மூளையில் புற்றுநோய்க்கட்டி ஏற்பட்டது. கடந்த ஆண்டு புற்றுநோயின் வீரியம் அதிகரித்ததால் அவரால் வயலின் வாசிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை கட்டாயம் செய்தாக வேண்டும் என டர்னரிடம் கூறிய போது, தன்னால் வயலின் வாசிக்க முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தை மருத்துவர்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறார் டர்னர்.

எனவே மருத்துவர்கள் அவரின் வயலின் வாசிக்க உதவும் மூளையின் பாகங்களில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் அறுவை சிகிச்சையின் போது டர்னரை எழுப்பி வயலினை இசைக்க சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறே அவர் இசைக்க அந்த பாகங்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் புற்றுநோய் கட்டியை அகற்றியிருக்கிறார்கள்.

இதுகுறித்து 53 வயதாகும் டர்னர் கூறும்போது, தான் வயலினை 10 வயதிலிருந்து வாசித்து வருகிறேன், வயலினை வாசிக்க முடியாத நிலையை நினைத்து மனமுடைந்தேன். அந்த வருத்தத்தை தனது மருத்துவர் புரிந்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவர் அஸ்கன் கூறும்போது, 90 சதவிகித புற்றுநோய்கட்டிகளை அறுவை சிகிச்சையின் போது அகற்றிவிட்டதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து வந்த இடது கையின் செயல்பாட்டினை முற்றிலுமாக மீண்டும் மீட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருக்கும் நிலையில், தனது அறுவை சிகிச்சையின் போது, வயலின் வாசித்துக்கொண்டிருந்த டர்னரின் வீடியோ தற்போது வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

**-பவித்ரா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share