நடப்பு ராபி பயிர் பருவத்தில் கோதுமை விதைப்பு குறைந்துள்ள போதிலும், ஒட்டுமொத்த பயிர் விதைப்பு 5 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராபி பயிர் பருவம் அக்டோபரில் தொடங்கி அடுத்த ஆண்டின் மார்ச் மாதம் நிறைவடைகிறது. இப்பருவம் தொடங்கி இரு மாதங்கள் நிறைவு பெறவிருக்கும் நிலையில் முக்கிய ராபி பயிரான கோதுமை முந்தைய ஆண்டைவிட 20 சதவிகிதம் குறைவான அளவிலேயே பயிரிடப்பட்டுள்ளது. அதாவது, இதுவரையில் 60.19 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு மட்டுமே கோதுமை பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் கோதுமைப் பயிர் விதைப்பு 75.07 ஹெக்டேர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த பயிர் விதைப்பு கடந்த ஆண்டில் 219.47 லட்சம் ஹெக்டேரிலிருந்து இந்த ஆண்டில் இதுவரையில் 230.36 லட்சம் ஹெக்டேர்களாக உயர்ந்துள்ளது. இதில், பருப்பு வகைகள் 34 சதவிகிதம் கூடுதலான அளவில் 81.24 லட்சம் ஹெக்டேருக்குப் பயிரிடப்பட்டுள்ளன. அதேபோல அரிசி பயிரிடும் நிலப்பரப்பும் 31 சதவிகிதம் உயர்ந்து 8.57 லட்சம் ஹெக்டேர்களாக உள்ளது. எண்ணெய் வித்துப் பயிர்களை எடுத்துக்கொண்டால், கடந்த ஆண்டைவிட (51.30 லட்சம் ஹெக்டேர்) இந்த ஆண்டில் (49.78 லட்சம் ஹெக்டேர்) 3 சதவிகிதம் குறைவான அளவில் பயிரிடப்பட்டுள்ளது என்று மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.�,