ஆந்திர மாநிலச் சட்டமன்ற தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னெப்போதும் இல்லாத வெற்றியைக் கண்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 150 தொகுதிகளுடன் பெரும்பான்மை பெற்றுள்ளது. 25 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22 தொகுதிகளை கைப்பற்றியுற்றது. யார் இந்த ஜெகன்மோகன் ரெட்டி?
2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அப்போதைய ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராஜசேகர் ரெட்டி ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் இரும்புக் கரத்தை அகற்றி ஆட்சியமைத்தவர். அவருக்கு ஆந்திராவில் மிகப்பெரிய செல்வாக்குண்டு. அவரது மறைவுக்குப் பின் நிரப்பமுடியாத வெற்றிடம் உருவானது. அச்சமயத்தில் அரசியலில் ஜெகன்மோகன் ரெட்டி முக்கிய சக்தியாக இல்லை.
ராஜசேகர் ரெட்டியின் மறைவுக்குப் பின் ரோசய்யாவை ஆந்திர காங்கிரஸுக்குத் தலைமையாக நியமிக்க காங்கிரஸ் தலைமை விரும்பியது. அதே நேரம் தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிவதற்கான முன்னேற்றங்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இந்தக் காரணங்களாலும், அரசியலில் தனிமைப்படுத்தப்படுதல், காங்கிரஸ் மீதான ஊழல் வழக்குகள் போன்றவற்றால் காங்கிரஸ் மீது ஜெகன்மோகன் ரெட்டிக்கு பகை மூண்டது.
2009ஆம் ஆண்டில் கடப்பா மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ஜெகன்மோகன். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசக் கட்சி வேட்பாளர் ஸ்ரீகாந்த் ரெட்டியை விட 1.78 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெகன்மோகன் வெற்றிபெற்றார். தனது தந்தையின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக ஓதர்பு யாத்திரையைத் தொடங்கினார் ஜெகன்மோகன் ரெட்டி. இதற்கு ராஜசேகர் ரெட்டி விசுவாசிகளின் ஆதரவும் இருந்தது. ஆனால், காங்கிரஸ் தலைமையின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டார்.
தனது தந்தைக்கு இருந்த அரசியல் ஆளுமை தனக்கும் இருப்பதாக உணர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தனது தந்தையின் பாணியிலேயே கையசைப்பது, ஆதரவாளர்களை வரவேற்பது போன்றவற்றை முயற்சி செய்துள்ளார். அதன்பின் ரோசய்யாவின் அமைச்சரவையில் ஜெகன்மோகனின் சித்தப்பா ஒய்எஸ் விவேகானந்தா ரெட்டியை இணைத்தது காங்கிரஸ். அப்போது, காங்கிரஸ் கட்சி தனது குடும்பத்தைப் பிரிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டி காங்கிரஸிலிருந்து வெளியேறினார் ஜெகன்மோகன்.
புளிவேந்துலா சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஜெகன்மோகனின் அன்னை விஜயலக்ஷ்மியும் ராஜினாமா செய்தார். 2011ஆம் ஆண்டில் யுவஜன ஸ்ரமிகா ரைத்து காங்கிரஸ் (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்) கட்சியைத் தொடங்கினார் ஜெகன்மோகன். மூன்றே மாதங்களில் கடப்பா மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வெற்றிபெற்றார் ஜெகன். விஜயலக்ஷ்மியும் புளிவேந்துலா சட்டமன்றத் தொகுதியில் விவேகானந்தா ரெட்டியை தோற்கடித்தார். இதன்பிறகு அரசியல் கட்சிகள் ஜெகன்மோகன் ரெட்டியைக் கொஞ்சம் சீரியஸாக கவனிக்கத் தொடங்கின.
2012ஆம் ஆண்டு மே மாதம் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டியை சிபிஐ கைது செய்தது. கறுப்புப் பண சலவை தொடர்பாக அமலாக்கத் துறையும் அவரை விசாரித்து வந்தது. ஜெகன் மீதும் அவருக்கு நெருக்கமான அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் வரை 16 மாதங்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி சிறையிலடைக்கப்பட்டார். சிபிஐ நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது கட்சியை அவரது அன்னை விஜயலக்ஷ்மி நிர்வகித்தார்.
மாநிலம் முழுவதும் சென்று மக்களைச் சந்திக்கும் பயணமாக ஜெகன்மோகனின் சகோதரி சர்மிளா பாத யாத்திரையைத் தொடங்கினார். இந்தப் பாத யாத்திரைதான் ஜெகன்மோகனின் வெற்றிக்கும், மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்கும் முக்கிய காரணமாக இருந்துள்ளது. 2014ஆம் ஆண்டில் புளிவேந்துலா தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், விசாகப்பட்டணத்தில் போட்டியிட்ட விஜயலக்ஷ்மி தோல்வியடைந்தார். ஆட்சி அதிகாரத்துக்கு தெலுங்கு தேசம் கட்சி வந்தாலும், காங்கிரஸை முந்தி மாநிலத்தில் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்.
அந்தத் தேர்தலில் மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகளில் 67 தொகுதிகளைக் கைப்பற்றிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியாகவும் சட்டமன்றத்தில் உருவெடுத்தது. பின்னர் தனது பாத யாத்திரையைத் தொடங்கினார் ஜெகன்மோகன். 3,648 கிலோமீட்டர் நடைப்பயணமாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதுதான் இந்தப் பாத யாத்திரையின் நோக்கம். இதற்கு பிரஜ சங்கல்ப யாத்திரை என்று பெயரிடப்பட்டது. இந்தப் பாத யாத்திரைதான் தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் வெற்றிக்கான முக்கியக் காரணமாகும்.
ராஜசேகர ரெட்டியின் பெயரை வைத்து ஜெகன்மோகன் அரசியலில் பிழைப்பதாக மற்ற கட்சிகள் குற்றம்சாட்டி வந்தாலும், ஜெகன்மோகன் தனது உழைப்பாலும், பாத யாத்திரை வெற்றியாலும் அரசியலில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக்கொண்டார். பொதுக்கூட்டங்களில் தனது உரையாற்றும் திறமையையும் வளர்த்துக்கொண்டார் ஜெகன்மோகன். கூட்டங்களில் கூடியிருக்கும் மக்களை அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அக்கா, அண்ணா போன்ற வார்த்தைகளால் அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ஜெகன்மோகன். இது அவருக்கு மக்கள் கூட்டத்தையும், ஆதரவையும் பெருக்கித் தந்தது.
கட்சியின் அடித்தளம் பலமாக இல்லையென்பதை உணர்ந்த ஜெகன்மோகன் பலம் வாய்ந்த கட்சிப் பணியாளர்களைத் தேர்ந்து பொறுப்புகளில் நியமித்தார். மாவட்ட வாரியாக ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பூத் நிர்வாகிகளுடன் கூட்டங்களை நடத்தி ஆலோசித்தார். அவர்கள் கட்சித் தலைமையுடனும், மக்களுடனும் தொடர்பில் இருந்துள்ளனர். கிராம அளவில் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு 60,000 கடிதங்களை எழுதிய ஜெகன்மோகன் அவர்களது கருத்துகளையும் கேட்டறிந்தார். இதனால் கட்சி வலுவடைந்ததுடன் மக்களின் விருப்பங்கள் ஜெகன்மோகனின் கொள்கைகளில் இடம்பெற்றன.
கல்வி, சுகாதாரம், விவசாயிகளுக்கும் பெண்களுக்கும் ஊக்கத்தொகை, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மானியம் என ஜெகன்மோகன் அளித்த ஒன்பது முக்கிய வாக்குறுதிகளும் அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. இந்தத் திட்டங்கள் பற்றிய செய்திகளை ஆந்திரத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டுசேர்க்கும் பணியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பணியாளர்கள் தீவிரமாகச் செய்தனர்.
மறுபுறம், தன்னை அசைக்க முடியாது என்று அதீத நம்பிக்கை கொண்டிருந்த சந்திரபாபு நாயுடு மீது மக்களிடையே எதிர்ப்பலைகள் ஓங்கியிருந்தன. இதன் விளைவாக தெலுங்கு தேசம் கட்சியைத் தோற்கடித்து அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருகிறது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். தற்போது கோஷங்களுடனும், முழக்கங்களுடனும் ஆந்திர மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. அவர் மே 30ஆம் தேதியன்று ஆந்திர முதலமைச்சராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.�,”