உலகப்புகழ் பெற்ற மைசூர் தசரா திருவிழாவின் இறுதி நாளான நேற்று (செப்டம்பர் 30) விஜயதசமியை முன்னிட்டு யானைகள் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. கர்நாடக பண்பாட்டையும் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை லட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர்.
தேவி பராசக்தி சாமுண்டீஸ்வரியாக வடிவம்கொண்டு மகிஷனை சம்ஹாரம் செய்த இடமே மகிஷாபுரம். இதை மகிஷா மண்டலம், மகிஷுர் போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டு பின்னர் மைசூர் என்று மருவியது. மகிஷ வதம் நடைபெற்ற இந்த இடத்தில் நவராத்திரி விழா நடைபெறுவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
இந்த ஆண்டு 407ஆவது ஆண்டாக வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது தசரா. நவராத்திரி ஒன்பது நாள்களும் சிறப்பான பூஜைகளும், கொண்டாட்டங்களும் நடைபெற்ற மைசூரில் இறுதி நாளான பத்தாம் நாள் விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி எனும் யானைகள் அணிவகுப்பு சிறப்பானது.
கர்நாடக அரசு மைசூர் தசரா விழாவினை வெகு பிரமாண்டமாக நடத்தி வருகிறது. அரசு விழாவாக மன்னர்கள் குடும்பத்தின் முன்னிலையில் இது நடைபெற்றது. அரசுப் படைகளின் அணிவகுப்பு, அரசின் பெருமைகளைச் சொல்லும் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு என உலகமே வியக்கும் வகையில் இவ்விழா கொண்டாடப்பட்டது. சாமுண்டீஸ்வரியின் பிரமாண்ட ஊர்வலத்துடன் இவ்விழா நேற்று நிறைவுபெற்றது.�,