lமீனவர்கள், விவசாயிகள் கோரிக்கை : ராமதாஸ்

தமிழக விவசாயிகள், மீனவர்கள், நெடுவாசல் மக்கள் ஆகியோரின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள், விவசாயிகள் கோரிக்கை குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறதோ? என்ற ஐயத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும், செயல்களும் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கின்றன. தமிழகம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பதில் மட்டும் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்வதும், பாராமுகம் காட்டுவதுமே இதற்கு காரணமாகும்.

தமிழகத்தின் இன்றைய தலையாய பிரச்னையாக உருவெடுத்திருப்பது வரலாறு காணாத வறட்சி காரணமாக உழவர்கள் அனுபவிக்கும் வேதனையும், துயரங்களும் ஆகும். தமிழகத்தின் ஒட்டுமொத்த பாசனப்பரப்பில் 87 சதவீதம் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உழவர்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திதான் டில்லியில் தமிழக உழவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 15 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் அவர்களின் கோரிக்கைகளை மத்திய ஆட்சியாளர்கள் இதுவரை காது கொடுத்துக் கேட்க மறுக்கின்றனர். சோறு படைக்கும் உழவர்களை அரசு இவ்வாறு அவமதிப்பது நியாயமல்ல.

அதேபோல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை காரணம் காட்டி, அத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று நெடுவாசல் மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், அவர்களை சற்றும் மதிக்காமல் அதற்கான ஒப்பந்தத்தை கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு நேற்று ஒப்பந்தம் செய்துள்ளது. இது மிகப்பெரிய நம்பிக்கை துரோகமாகும்.

மீனவர்கள் பிரச்னையிலும் மத்திய அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ, கடந்த 6ஆம் தேதி சிங்களப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சு நடத்திய மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக மீனவர்களை இனி சிங்களப் படையினர் தாக்க மாட்டார்கள்; கைது செய்யமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் பிரிட்ஜோ படுகொலைக்குப் பிறகு இதுவரை 3 முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 38 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த வி‌ஷயத்திலும் மீனவர்களுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சார்ந்த வி‌ஷயங்களில் மட்டும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவது ஏன்? இந்தப் போக்கை கைவிட்டு, தமிழக விவசாயிகள், மீனவர்கள், நெடுவாசல் மக்கள் ஆகியோரின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts