Lமழையால் காபி உற்பத்தி சரிவு!

Published On:

| By Balaji

குறைந்த உற்பத்தி மற்றும் விலை வீழ்ச்சியால் காபி உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவின் கொடகு, சிக்மகளூர் மற்றும் ஹாசன் ஆகிய பகுதிகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த காபி உற்பத்தியில் 70 விழுக்காடு அளவுக்கு விளைகிறது. தமிழ்நாட்டிலும் காபி பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த தென்மேற்குப் பருவ மழையால் காபி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அராபிகா ரக காபி உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதே சமயத்தில் அராபிகா காபி பெருமளவு உற்பத்தி செய்யப்படுகின்ற பிரேசில், கொலம்பியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான விலை வீழ்ச்சி கண்டுள்ளது. 50 கிலோ பை ஒன்றின் விலை ரூ.6,500 முதல் ரூ.7,000 ஆகக் குறைந்துள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி சரிந்துள்ளது. 2017ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவிலிருந்து 3,34,149 டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2018ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 3,22,933 டன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கொடகு பகுதியைச் சேர்ந்த விவசாயி என்.போஸ் மண்டன்னா இதுகுறித்து *பிசினஸ் லைன்* ஊடகத்திடம் பேசுகையில், “காபியின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்திருப்பதும், ஊதியம் அதிகரித்திருப்பதும் ஏற்கெனவே எங்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சியால் எங்களால் சிறிது லாபம் ஈட்ட முடிந்தது. ஆனால் அது எங்களுக்குப் போதுமானதாக இல்லை” என்றார்.

2018-19ஆம் ஆண்டில் காபி உற்பத்தி 3.16 லட்சம் டன்னாக இருக்குமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவ மழை ஏற்படுத்திய சேதத்தால் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டும் 82,000 டன் அளவுக்கு இந்த ஆண்டில் காபி உற்பத்தி குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share