ஹைதராபாதில் செயல்பட்டு வரும் கோஸ்டல் வங்கியின் இயக்குனரும், எக்ஸ்பிரஸ் டிவி தலைமை நிர்வாகியுமான ஜெயராம் சிகுருபதி காரினுள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது ஆந்திர மாநிலத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் கோஸ்டல் வங்கியின் இயக்குநர் ஜெயராம் சிகுருபதி, வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர். எக்ஸ்பிரஸ் டிவி தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகியாக இருந்துவந்த இவர், ஹெமரஸ் எனும் மருந்து நிறுவனத்தையும் நடத்தி வந்தார். நேற்று இரவு 11.30 மணியளவில் ஜெயராமின் கார், கிருஷ்ணா மாவட்டம் நந்திகாமா மந்தல் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது.
அங்கிருந்த பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது, ஜெயராம் காரினுள் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காரின் பின்பக்க இருக்கையில் அவர் பிணமாகக் கிடந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வரும் போலீசார், காருக்குள் இருந்த ஆவணங்கள் மூலமாக ஜெயராமின் அடையாளம் தெரிய வந்ததாகக் குறிப்பிட்டனர்.
“முந்தைய தினமே அவர் தனது வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார். தனியாக ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் ஒருவர் பணியில் இருந்தபோதும், தனியாகக் காரை ஓட்டி வந்துள்ளார். இடையில், அவர் யாரையும் தொடர்புகொள்ளவில்லை. வியாழக்கிழமை (ஜனவரி 31) அன்று மாலை, விஜயவாடாவில் உள்ள தனது நிறுவன நிர்வாகியிடம் பேசியுள்ளார். அப்போது, தான் தங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார்” என்று தெரிவித்தார் ஒரு காவல் துறை அதிகாரி.
ஜனவரி 31ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் பந்தங்கி சுங்கச்சாவடியை ஜெயராமின் கார் கடந்து சென்றதாகவும், அப்போது வேறொரு நபர் காரை ஓட்டிச் சென்றதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக, அவர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டு காரில் கிடத்தப்பட்டதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. ஜெயராமின் காரில் மது பாட்டில்கள் கிடந்துள்ளன. இது கண்டிப்பாக இயற்கையான முறையில் நிகழ்ந்த மரணமல்ல என்று தெரிவித்துள்ள போலீசார், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இன்னும் பல உண்மைகள் தெரிய வரும் என்று குறிப்பிட்டுள்ளனர். இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
�,”