“தேர்தல் முடிந்தபிறகு அடுத்த தேர்தலுக்காக மக்களிடம் செல்லலாம் என்று இருந்துவிடக் கூடாது. இப்போதில் இருந்தே மக்களுக்கான சேவைகளை செய்ய வேண்டும். மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் முடிவுக்குப் பின் கட்டளையிட்டிருந்தார். இதை தமிழின் முதல் மொபைல் தினசரி மின்னம்பலத்திலும் நாம் வெளியிட்டிருந்தோம்.
இதை ஒட்டி மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மனு நீதி முகாம்களை குறி வைத்து ஒரு வியூகம் அமைக்கப்பட்டிருக்கிறது. திங்கள் கிழமை தோறும் நடக்கும் மனு நீதி முகாம், தேர்தல் நடத்தை விதிகள் முடிந்து தமிழகம் முழுதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மீண்டும் இன்று முதல் தொடங்கியது. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் ஏராளமான முதியோர்கள், பாமரர்கள் புகார்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு இன்று மீண்டும் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற மனு நீதி முகாமில் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் கிஷோர் ஆட்சியரிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். ஆனால் அதை ஆட்சியர் நிராகரித்துவிட்டார்.
இதுபற்றி வழக்கறிஞர் கிஷோரிடம் பேசினோம்.
“நான் மக்கள் நீதி மய்யம் திருச்சி மத்திய மாவட்டத்தில் உறுப்பினராக இருக்கிறேன். திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு வாரமும் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் மனுநீதி முகாமுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். அவர்களில் பலருக்கு எழுதப்படிக்கத் தெரியவில்லை. தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகிற அவர்களுக்கு மனு எழுதுவது எப்படி, யாரிடம் புகார் தர வேண்டும் எதுவும் தெரிவதில்லை. அதுவே அவர்களுக்கு இன்னொரு பிரச்சினையாகிவிடுகிறது.
அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சிற்சில நுகர்வோர் அமைப்புகள் மட்டுமே இப்போது இருக்கின்றன. ஆனால் மனு கொடுக்க வருகிறவர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது இன்னும் பல அமைப்புகள் உதவியில் ஈடுபட்டாக வேண்டும். ஆட்சியர் அலுவலகத்தில் சேவை மையம் இருந்தாலும் அவர்கள் மனு எழுதித் தரும் வேலையில் ஈடுபடுவதில்லை.
மக்கள் நீதிமய்யம் இந்த சேவையில் ஈடுபடத் தயாராக இருக்கிறது. எனவே மனு நீதி நாளில் புகார் கொடுக்க வருகிறவர்களுக்கு உதவி செய்வதற்காக மக்கள் நீதி மய்யத்துக்கு அனுமதி தர வேண்டும் என்று இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் மனு அளித்தோம். அதை வாங்கிப் பார்த்த ஆட்சியர், ’இதற்கெல்லாம் நான் அனுமதி கொடுக்க முடியாது. வேண்டுமென்றால் நீதிமன்றத்துக்குச் சென்று டைரக்ஷன் வாங்கி வாருங்கள்’ என்று கூறிவிட்டார். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவெடுப்போம்” என்றார் கிஷோர்.
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வாராவாரம் திங்கள் கிழமை நடக்கும் மனு நீதி முகாமில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சேவை செய்வதன் மூலம் அம்மாவட்டத்திலுள்ள பரவலான கிராம மக்களுடன் தொடர்பு கிடைக்கும் என்று இந்த வியூகம் வகுத்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். ஆனால் இதை நிராகரித்துவிட்டார் திருச்சி ஆட்சியர்.
“நாங்கள் இந்த சேவையில் எங்களை மட்டும் அனுமதிக்கக் கேட்கவில்லை. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அனுமதி கொடுங்கள். உதவி செய்கிறவர்கள் செய்யட்டும் என்று கேட்டோம். ஆனால் இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் மக்களிடம் மேலும் நெருங்கிவிடுமோ என்ற அச்சத்தில்தான் ஆட்சியர் மறுக்கிறார்” என்கிறார் கிஷோர்.
இதேபோல எல்லா மாவட்டங்களிலும் மனு நீதி முகாம்களில் மையம் கொள்ள திட்டமிட்டிருக்கிறது மக்கள் நீதி மய்யம்.
**-ஆரா**
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)
**
.
**
[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)
**
.
**
[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)
**
.
.�,”