உள்நாட்டில் நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனல்மின் நிலையங்கள் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி வாங்கத் தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலக்கரி இறக்குமதியைக் குறைக்க அரசு வகுத்துள்ள நீண்ட காலத் திட்டங்களுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
2017ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க நிலக்கரி இறக்குமதி ஏதும் இல்லை. ஆனால், நடப்பு ஆண்டின் தொடக்கம் முதலே வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி வாங்குவதற்கு தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அனல்மின் நிலையங்கள் ஆர்டர் செய்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மின்சக்தித் துறையைச் சேர்ந்த உயரதிகாரியான அஜய் ஜெயின் பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், “நடப்பு ஆண்டில் இதுவரையில் 2,00,000 டன் அளவிலான நிலக்கரியை ஆந்திரப் பிரதேசம் இறக்குமதி செய்துள்ளது. 2018ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் டன் அளவிலான நிலக்கரியை ஆந்திரப் பிரதேசம் இறக்குமதி செய்யக் கூடும். நிலக்கரியை மட்டும் நம்பி நாங்கள் செயல்பட்டிருந்தால், பெரும் சீரழிவு ஏற்பட்டிருக்கும்” என்று கூறினார்.
தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் தலைவரான விக்ரம் கபூர் பேசுகையில், “நடப்பு ஆண்டில் சுமார் 1.4 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியைத் தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் இறக்குமதி செய்துள்ளது. ஆனால், 2016ஆம் ஆண்டு முதல் ஓராண்டு காலத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படவில்லை” என்று கூறினார். 2018 மார்ச் மாதத்தில் அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி இறக்குமதியை முற்றிலுமாகக் குறைக்க நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி எடுத்திருந்தது. ஆனால், அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோல் இந்தியா நிறுவனமே நிலக்கரி இடமாற்றம் செய்வதற்குப் போக்குவரத்துக் குறைபாட்டுடன் உள்ளது கவனத்துக்குரியது.�,