மக்களவைத் தேர்தல் எப்போது நடக்கிறது என்ற அறிவிப்பை இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது
நடப்பு மக்களவை ஜூன் 3ஆம் தேதியோடு முடிவடைகிறது. அடுத்த மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் 5ஆம் தேதியே அறிவிக்கப்பட்ட நிலையில், இம்முறை இன்னமும் அறிவிக்கப்படாமல் உள்ளது. கடந்த ஒரு மாதமாகப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சுற்றுப் பயணங்களில் சுமார் 157 திட்டங்களை அறிமுகப்படுத்தியும், தொடக்கியும் வைத்துள்ளார்.
அதேபோல ஜனவரி 8 முதல் பிப்ரவரி 7 வரையில் 57 திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். அரசுத் திட்டங்கள் துவக்க விழாவுக்கான மோடியின் சுற்றுப் பயணம் தொடர்ந்து வந்ததால்தான் தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் இன்றுமாலை 5.00 மணிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறது. இந்த சந்திப்பில் மக்களவைத் தேர்தல் தேதிகள், வாக்கு எண்ணிக்கை தேதி, தேர்தல் முறைகள் குறித்த முறையான அறிவிப்பை வெளியிடுகிறது..
தேர்தல் 7 முதல் 8 கட்டங்களாக நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடக்கலாம். ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்ட மன்றத் தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஜம்மு காஷ்மீரில் மெகபூபா தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு மே மாதத்தோடு 6 மாதங்கள் முடிவடையப் போகிறது. ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென விதி இருப்பதால் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஜம்மு காஷ்மீர் சட்ட மன்றத் தேர்தலும் அறிவிக்கப்படலாம்.
இதனிடையே மார்ச் 9ஆம் தேதி சேலத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் தேதி இன்றைக்கு அல்லது திங்கள் கிழமை அறிவிக்கப்படலாம். எனக்குக் கிடைத்த தகவலின்படி இன்னும் ஒரே மாதத்தில் தேர்தல் வந்துவிடும். தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் அதாவது அடுத்த 11 அல்லது 17ஆம் தேதிக்குள் தமிழகத்தில் தேர்தல் நடக்கலாம்” என்று கூறியிருந்தார். அதிமுக கூட்டணியில் மத்தியில் ஆளும் பாஜகவும் இருப்பதால், பாஜக வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலின்படி முதல்வர் இவ்வாறு பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் கூறிய மறுநாளே தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பு நடத்தவுள்ளதால் தேர்தல் தேதியை அறிவிப்பதில் மத்திய அரசின் தலையீடு இருக்குமா என்ற எதிர்க்கட்சிகளின் சந்தேகம் வலுத்துள்ளது.�,