lதேயிலை: உற்பத்திக் குறைவால் உயரும் விலை!

Published On:

| By Balaji

வட இந்திய மாநிலங்களில் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதாலும், கென்யா உள்ளிட்ட நாடுகளில் தேவை அதிகரித்துள்ளதாலும், தேயிலை விலை 10 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது.

இது குறித்து குன்னூர் தேயிலை வர்த்தகக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான ஜே.கல்யாண் சுந்தரம் பிசினஸ்லைன் ஊடகத்திடம் கூறுகையில், “தற்போதைய நிலையில் உயர் தர அஸ்ஸாம் தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.245 வரையில் விற்பனையாகிறது. ஆனால் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் சராசரி விற்பனை விலை ரூ.220 ஆக மட்டுமே இருந்தது” என்றார். தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் வட இந்திய மாநிலங்களில் 127.54 மில்லியன் கிலோ அளவிலான தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் செப்டம்பர் மாத உற்பத்தியை விட 42 மில்லியன் குறைவாகும்.

அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் தேயிலை உற்பத்தி 31 மில்லியன் கிலோ குறைந்து 81.75 மில்லியன் கிலோவாக இருந்தது. மேற்கு வங்க மாநிலத்தின் டூவர்ஸ் மற்றும் டெராய் ஆகிய பகுதிகளில் தேயிலை உற்பத்தி 9 மில்லியன் கிலோ குறைந்துள்ளது. அதிக மழை மற்றும் குறைந்த சூரிய ஒளி காரணமாக தேயிலை உற்பத்தி வட மாநிலங்களில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தியில் சுமார் 65 சதவிகிதம் ஜூலை – நவம்பர் மாதங்களில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 2016ஆம் ஆண்டில் இந்தியா மொத்தம் 1,267.36 மில்லியன் கிலோ அளவிலான தேயிலையை உற்பத்தி செய்திருந்தது. இதில், வட இந்திய மாநிலங்களில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் அளவு 1,054.51 மில்லியன் கிலோவாகும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share