சட்டமன்றத்தில் குட்காவைக் காட்டியது தொடர்பான உரிமை மீறல் பிரச்சினையில் உரிமைக் குழு முன்பு ஆஜராக அவகாசம் வேண்டும் என திமுக எம்.எல்.ஏ.க்கள் விடுத்த கோரிக்கையை உரிமைக் குழு நிராகரித்திருக்கிறது.
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பரவலாக விற்பனை செய்யப்பட்டுவருவதையும் குட்கா சம்பவத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் விளையாடுவதையும் சுட்டிக்காட்டும் வகையில், சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குட்காவைக் காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார் ஸ்டாலின். அதன்படி சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் 45 பேர் குட்காவைக் காட்டினார்கள். அவர்களில், தொடர்ந்து சபையில் குட்காவைக் காட்டிய 21 பேருக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி நோட்டிஸ் அனுப்பப்பட்டது.அவர்கள் அனைவரும் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறும் கேட்டுக்கொண்டது.
அவை உரிமைக் குழுவிடம் கால அவகாசம் கேட்க, சம்பந்தப்பட்ட 20 எம்.எல்.ஏ,களை அழைத்து அறிவாலயத்தில் நேற்று (செப்டம்பர் 4) காலையில் கூட்டத்தை நடத்தினார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். நோட்டீஸ் சம்பந்தமாகச் சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசனைகள் செய்ய வேண்டியுள்ளதால் 15 நாள் அவகாசம் கேட்டுக் கடிதம் கொடுங்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள உறுப்பினர்களிடம் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஏழாவது நாளான இன்று உரிமைக்குழுவின் நோட்டீஸ் குறித்து இன்று(செப்டம்பர் 05) சபாநாயகரைச் சந்திக்க திமுக எம்எல்ஏக்கள் திட்டமிட்டு, காலை 10.00 மணியளவில் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக்குப் பின், அவை உரிமைக் குழுவிடம் ஸ்டாலின் கடிதம் கொடுத்துள்ளார்.
ஆனால், கால அவகாசம் கொடுக்கக் கூடாது என்று அவை உரிமைக் குழுத் தலைவரும் பெரும்பான்மை உறுப்பினர்களும் முடிவுசெய்துள்ளதாகச் சொல்கிறார்கள். எனவே, அடுத்த கட்டமாக நீதிமன்றம் செல்வதுதான் திமுக எம்.எல்.ஏ.க்கள் முன்புள்ள வழி என்றும் சொல்லப்படுகிறது.�,