பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையன்று, அதிமுக பேனர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் தினகரன் உள்பட 100பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பசும்பொன்னில் கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த முதல்வர், துணை முதல்வரை வரவேற்று அதிமுகவினர் பேனர்கள் வைத்திருந்தனர். இதற்கிடையே மதியம் 1மணியளவில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் மரியாதை செலுத்த வந்தபோது, அந்த பேனர்கள் கிழிக்கப்பட்டன.
பேனர்களைக் கிழித்தது தினகரன் தரப்புதான் என்று அதிமுகவினர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளித்த அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், “பேனர் கிழிக்கப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. அதிமுக பேனரை கிழிக்கச் சொல்வதுதான் எங்களுக்கு வேலையா? நாங்கள் சொல்லி யாரும் பேனரைக் கிழிக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக தினகரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தினகரன் உள்ளிட்ட 100 பேர் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் கமுதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அமமுகவின் கமுதி ஒன்றியத் துணைச் செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அமமுகவினர் கைது செய்யப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று (அக்டோபர் 1) அறிக்கை வெளியிட்ட தினகரன், “ஆட்சியாளர்கள் மீதுள்ள அதிருப்தியின் காரணமாகப் பொதுமக்களே பேனரை சேதப்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அமமுகவினர் மீது பேனரை சேதப்படுத்தியதாகப் பொய் வழக்கு புனைந்து, அப்பாவித் தொண்டர்களை காவல் துறையினர் வீடு வீடாகச் சென்று கைது செய்துவருகின்றனர். இந்த அராஜக நடவடிக்கையை காவல் துறை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,