ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானதாகக் கூறப்பட்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த தாய், தந்தை, தம்பி மூவரையும் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலைசெய்த மூத்த மகனைக் கைது செய்துள்ளனர் போலீசார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள காவேரிபாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி பெயர் கலா. இந்த தம்பதியருக்கு கோவர்த்தனன், கவுதமன் என்று இரண்டு மகன்கள். கோவர்த்தன் திண்டிவனம் அதிமுக மாணவர் அணியில் உள்ளார். டிராவல்ஸ் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார் கவுதமன். கோவர்த்தன் மனைவி பெயர் தீபா காயத்ரி. ஐந்து பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த 15ஆம் தேதி இரவு வீட்டிலுள்ள ஏசி அறையில் ராஜ், அவரது மனைவி கலா, இளைய மகன் கௌதமன் மூவரும் தூங்கினர். மற்றொரு அறையில் மூத்த மகன் கோவர்த்தனும் தீபா காயத்ரியும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் திடீரென்று தனது வீட்டில் தாய், தந்தை, தம்பி மூவரும் தூங்கிய அறையில் ஏசி வெடித்து தீப்பற்றி எரிவதாக அலறினார் கோவர்த்தன். வீட்டின் வெளியே வந்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். இதன்பின்னர் காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதற்குள் ராஜ், கலா, கௌதமன் மூவரது உடல்களும் அந்த அறையில் முழுவதுமாக எரிந்து கிடந்தன.
தீ விபத்து ஏற்பட்ட அறையை ஆய்வு செய்த தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் சந்தேகம் தெரிவித்தனர். ராஜ் தலையில் அடிபட்டு, அந்த அறையில் ரத்தம் சிதறியுள்ளது. இதேபோல கௌதமன் தலையிலும் காயம் இருந்துள்ளது. கலா எரிந்த நிலையில் கிடந்துள்ளார். தீப்பிடித்து எரிந்த அறையில் பெட்ரோல் நாற்றம் இருந்தது கண்டறியப்பட்டது. அறையைச் சோதனையிட்டபோது, முழுவதும் தீப்பற்றியபிறகே ஏசிக்கு தீ பரவியது தெரிய வந்தது. இதையடுத்து, 3 பேர் பலியானது திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை என்ற முடிவுக்கு வந்தனர் போலீசார்.
திண்டிவனம் காவல் ஆய்வாளர் சீனிபாபு, உதவி ஆய்வாளர் ரவிசந்திரன் இருவரும் இந்த வழக்கு தொடர்பாகத் தீவிர விசாரணையில் இறங்கினர். கோவர்த்தன் மனைவி தீபா காயத்ரியிடமும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமும் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. இதன்பின்னர், இறுதியாக கோவர்த்தனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீசாரின் கடுமையான விசாரணை நடைமுறைகளை எதிர்கொள்ள முடியாமல், தனது குடும்பத்தை உயிரோடு எரித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் கோவர்த்தன்.
“சார், என்னை ஒன்றும் செய்யாதீங்க. நீங்கள் கண்டுபிடிச்சிட்டிங்க, நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். என் அப்பா ராஜ், வெல்டிங் ஒர்க்ஷாப் வைத்துள்ளார், தம்பி கௌதமன் பைனான்ஸ் செய்து வருகிறான். என் தம்பிக்குத்தான் அவர்கள் அதிகமாக பணம் கொடுத்து உதவி செய்தார்கள். என்னை
கண்டுகொள்ளவில்லை. ஒரு காலேஜ் துவங்கப் பணம் கேட்டேன். இல்லை என்று மறுத்துவிட்டார்கள். இருந்த இடத்தையும் விற்பனை செய்து தம்பிக்கு
கொடுக்க முடிவு செய்தார்கள். இதனால் எனக்கும் அப்பாவுக்கும் பிரச்சினை வந்தது.
வேறு வழி தெரியாமல் அப்பா, அம்மா, தம்பி, மூவரையும் கொலை செய்யத் திட்டமிட்டு பலநாள் யோசித்து வந்தேன். அன்று இரவு சுமார் 2.00 மணியளவில், நான் தயாராக வைத்திருந்த பெட்ரோலை எடுத்துப்போய் அறையின் நான்கு பக்கமும் ஊற்றினேன். வீட்டில் இருந்த கெரோசினையும் ஊற்றிவிட்டு தீ வைத்து கதவை மூடிவிட்டேன். அப்பா (ராஜ்) எழுந்து தப்பிக்க முயற்சித்தார். அவரை பீர் பாட்டிலால் தலையில் அடித்து மீண்டும் உள்ளே தள்ளிவிட்டேன். தம்பி
புகையில் கண் தெரியாமல் தப்பிக்க ஓடிப்போய் சுவரில் இடித்துக்கொண்டான். அனல் தாங்கமுடியாமல் ஏசிக்கு கீழே போய் பதுங்கி
நின்றார் அம்மா. அவரைக் காப்பாற்றினால் விஷயம் வெளியில் தெரிந்துவிடும் என்று அவரையும் காப்பாற்றாமல் விட்டுவிட்டேன்” என்று கோவர்த்தன் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவரது வாக்குமூலம் காவல் துறையினரையே கோபம் கொள்ள வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
சொத்து மீதான பேராசையால் பெற்ற தாய் தந்தையையும் உடன்பிறந்த சகோதரனையும் உயிரோடு எரித்து கோவர்த்தன் கொடூரமாகக் கொலை செய்தது காவேரிப்பாக்கம் பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)
**
.
.
�,”