�
ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான தமிழக லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டுள்ளது. மாநில லோக் ஆயுக்தாவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகளான கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் லோக் ஆயுக்தாவின் நீதித்துறை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்த வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் நீதித்துறை சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். லோக் ஆயுக்தா தலைவர் மற்று உறுப்பினர்களின் பெயர்களை தேடுதல் குழு மார்ச் 13ஆம் தேதியன்று பரிந்துரைத்தது. இந்தப் பட்டியலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேர்வுக் குழு பரிசீலித்து பின்னர் அதிகாரிகளால் இறுதிசெய்யப்பட்டது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், லோக் ஆயுதாவின் தலைவரையும், உறுப்பினர்களையும் நியமிக்க அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு மாநில அரசு கடிதம் எழுதியிருந்தது. அதற்கு தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்தது. 2018ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி முதல் தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,