சென்னை ஐஐடி கல்லூரி வளாகத்தில், கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஐஐடியில், பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த 23 வயதான ஷாஹித் கோர்மத் என்ற மாணவர், ஐஐடியில் இறுதியாண்டு ocean engineering படித்து வருகிறார். இந்த மாணவர் இன்று (செப்டம்பர் 22) ஐஐடி வளாகத்தில் உள்ள ஜமுனா விடுதி அறை எண் 121இல் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்து, பாதுகாப்பு அலுவலர் ஒருவர் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஷாஹித்தின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, அவரின் பெற்றோருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
ஷாஹித் கோர்மத் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் ஏதும் இதுவரை தெரிய வரவில்லை. இருப்பினும், ஷாஹித் கல்லூரிக்குச் சரிவர செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. அவருடைய வருகைப் பதிவு குறைந்ததன் காரணமாக, அண்மையில் ஐஐடி நிர்வாகம் சார்பில் அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்றிரவு முதல், அவர் குடும்பப் பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது..இந்நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.�,