சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் இன்று (ஜூலை 1) திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
ஜூன் மாதத்திற்கான ஊதியம் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு முழுமையாக வழங்கப்படாததைக் கண்டித்தும், அதை உடனே வழங்கக் கோரியும் இந்த திடீர் வேலை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
அலுவலக ரீதியாக வாரத்தின் முதல் நாள் திங்கள் கிழமை என்பதால் சென்னையில் கூடுதல் பரபரப்பு எப்போதுமே உண்டு. பணிக்குச் செல்வதற்காக தனியார் ஊழியர்களும், பள்ளிக்குச் செல்வதற்காக லட்சக்கணக்கான மாணவர்களும் காலையில் பேருந்துக்காக காத்திருந்த நிலையில்… சென்னையின் பல்வேறு இடங்களில் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டன.
ஆவடி, அம்பத்தூர், ஐய்யப்பன்தாங்கல், போரூர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளிலிருந்து பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. சுமார் 3,500 பேருந்துகள் வரை இயக்கப்பட வேண்டிய இடத்தில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சேம நல பணியாளர்களை கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இதனால் தாம்பரம் முதல் கிண்டி, அடையாறு, வேளச்சேரி, போரூர், பூவிருந்தவல்லி என்று பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
என்ன காரணம் என்றே தெரியப்படுத்தப்படாமல் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் வேதனை மட்டுமல்ல கோபமும் அடைந்தனர் . சில மணி நேரம் காத்திருந்து ஒருவழியாக ஷேர் ஆட்டோக்களைப் பிடித்து அலுவலகங்களுக்கு செல்லத் துவங்கினர். இதனால் மின்சார ரயில்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
“வேலைநிறுத்தம் என்று ஏற்கனவே சொல்லியிருந்தால் நாங்கள் அதற்கான முன்னேற்பாடுகளுடன் தயாராகி இருப்போம். தற்போது திடீரென பேருந்துகள் இயங்காததால் குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கோ அல்லது வேலைக்கோ செல்ல முடியவில்லை. இதனால் வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையின் காலையிலேயே எரிச்சலும் மன அழுத்தமும்தான் அதிகமாகியுள்ளது” என்று தெரிவித்தனர் பலர்.
போக்குவரத்து துறை ஏற்கனவே கடுமையான நிதிப் பற்றாக்குறையில் இருக்கும் நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஜூன் மாத ஊதியத்தில் சில ஆயிரம் ரூபாய்கள் பிடித்தம் செய்யப்பட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கின்றன. இன்று காலை பணிமனைக்கு வந்ததும் இதுபற்றி உரையாடல்கள் ஊழியர்களிடையே நடந்தது. அப்போதுதான் பலருக்கும் இதுபோல பிடித்தம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. உடனே எதிர்க்கட்சித் தொழிற்சங்கத்தினர் ஊழியர்கள் தங்கள் நிர்வாகிகளிடம் இதுபற்றிப் பேச, தொழிற்சங்கத்தினர் உடனடியாக முடிவெடுத்து ஆங்காங்கே பணிமனைகளில் இருந்து பேருந்துகளை எடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டனர். இதனால் காலை எட்டு மணி முதலே பல இடங்களிலும் பேருந்துகள் ஓடவில்லை.
பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்ட தகவல் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தெரியப்படுத்தப்பட அவரும் கடும் டென்ஷன் அடைந்தார். ‘இன்னிக்குதான் சட்டமன்றம் ஆரம்பிச்சிருக்கு. இந்தப் பிரச்சினை வேறயா?’ என்றவர் உடனடியாக போக்குவரத்துக் கழக உயரதிகாரிகளைக் கூப்பிட்டு சம்பளப் பிரச்சினை பற்றி பேசினார்.
அதற்குள் தொழிற்சங்கங்கள் சென்னை பல்லவன் இல்லத்தில் அமர்ந்து ஆலோசனை நடத்தத் தொடங்கினர். அரசுத் தரப்பில் ஏதும் உத்தரவாதம், பதில் இல்லாத நிலையில் வேலை நிறுத்தத்தை தொடர்வது என்று அவர்கள் முடிவெடுக்க இருந்தனர்.
இதையறிந்த போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் தொழிற்சங்கத்தினருடன் பேசி, ‘இன்று மாலைக்குள் முழுமையான ஊதியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும்’ என்று உத்தரவாதம் அளிக்கவும்தான் இன்று பகல் 12 மணிக்கு மேல் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
“போக்குவரத்துக் கழகத்தில் பற்றாக்குறை என்பது அதிமுக, திமுக என இரு அரசுகளிலும் நிலவுகிறது. அதுபோல இப்போதும் பற்றாக்குறை இருக்கிறது. அதை முதல்வரிடமும் தெரியப்படுத்தியுள்ளோம்.
போக்குவரத்து ஊழியர்கள் விரைந்து பணிக்குத் திரும்ப வேண்டும். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பேருந்து சேவையை வழங்க வேண்டும். நேற்று விடுமுறை என்பதால் போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் இன்று மாலைக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அரசுப் பணியில் இருப்பவர்களுடைய ஊதியத்தை குறைக்க முடியாது. பெரும்பாலான ஊழியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டனர். 4 பணிமனைகளில் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களும் விரைவில் பணிக்குத் திரும்பிவிடுவர்” என்று தெரிவித்தார்.
“போக்குவரத்து ஊழியர்களின் ஊதியப் பிரச்சினை முக்கியமானதுதான் என்றாலும், திங்கள் கிழமை காலையில் திடீரென சென்னை மாநகரின் போக்குவரத்தை முடக்கி மக்களை அவதிப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?” என்கிறார்கள் நாம் சந்தித்த பொதுமக்கள்.
அரசும், தொழிற்சங்கங்களும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்!
**
மேலும் படிக்க
**
**[தஞ்சை அமமுகவைக் குறிவைத்துக் களமிறங்கிய செந்தில்பாலாஜி](https://minnambalam.com/k/2019/06/30/17)**
**[சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்தைத் தடுத்தேன்: கே.எஸ்.அழகிரி](https://minnambalam.com/k/2019/07/01/17)**
**[ஸ்டாலினை சிபிஐ தேடிக் கொண்டிருக்கிறது: சி.வி.சண்முகம்](https://minnambalam.com/k/2019/07/01/21)**
**[திமுகவை எதிர்த்தவருக்கு திமுகவிடமே ராஜ்யசபா கேட்கும் எஸ்ரா](https://minnambalam.com/k/2019/06/30/31)**
**[செல்வாவின் அடுத்த படத்தில் தனுஷ்](https://minnambalam.com/k/2019/06/29/77)**
�,”