சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடுதல் கால அவகாசம் அளிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு விதித்த பின்பு, இதுவரை குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் யாரும் கோயிலுக்குள் செல்லவில்லை. சமீபத்தில் நடந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்திலும், பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிப்போம் என்று கேரள அரசு தெரிவித்தது. இது எதிர்கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மேலும் கால அவகாசம் அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
“சபரிமலை பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்யக் கூடுதல் வனப்பகுதி தேவை என்றும், பக்தர்கள் அமைதியாகத் தரிசனம் நடத்த வேண்டும் எனவும் நாங்கள் விரும்புகிறோம். இந்த மனுவை, நாளை அல்லது திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளோம். பெண்களை அனுமதிப்பதற்குக் கால அவகாசம் கேட்பதன்மூலம், தற்போதைக்குப் போராட்டங்கள் நடக்காமல் இருக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார். இரவு 10 மணிக்கு மேல் கடைகள் திறந்திருக்கக் கூடாது, பக்தர்கள் தங்கக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை நீக்க, கேரள அரசிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் பத்மகுமார் கூறினார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணியவாதியும், சமூகச் செயற்பாட்டாளருமான ரெஹானா பாத்திமா முன்ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். இந்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சபரிமலை செல்வதற்காக 6 பெண்களுடன் வந்த சமூகச் செயற்பாட்டாளர் திருப்தி தேசாய், நேற்று பகல் முழுவதும் கொச்சி விமான நிலையத்திலேயே தங்கியிருந்தார்.
போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பால், சபரிமலைக்குச் செல்லாமலேயே அவர் புனே திரும்ப முடிவு செய்தார்.�,