அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று ஆகஸ்டு 10 ஆம் தேதி காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அதிமுக அம்மா அணியின் தலைமைக் கழக கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே… கட்சியில் இருந்து பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோர் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தி பரவியது.
ஆனால் கூட்டம் முடிந்து வெளியிடப்பட்ட தீர்மான நகலோ தினகரனை மட்டும் குறிவைத்து அடித்தது.
’’தினகரனை துணைப் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களைத் திரும்ப பெறுவது, ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளே அதிமுக-வை வழிநடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தினகரன் வெளியிடும் நியமன அறிவிப்புகள் செல்லாது. அது அதிமுக தொண்டர்களை கட்டுப்படுத்தாது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தினகரன் அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது கட்சி விதிகளுக்கு முரணானது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சியில் இல்லாததால் தினகரனின் நியமனம் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது.
தீர்மான நகலில் தினகரன் குறிவைக்கப்பட்ட நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவைப் பற்றியோ, தினகரனைத் தவிர மற்றவர்களுக்கு அவர் செய்த பதவி நியமனங்கள் பற்றியோ இந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படவில்லை.
கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பின் வார்த்தைகளே இதற்கு சான்றாக இருக்கின்றன.
‘’கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்ற பொன்மொழிக்கேற்ப நாம் ஒன்று கூடி இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் லட்சியங்களை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளோம். நமது கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளராக பணியாற்றிய மாண்புமிகு அம்மா அவர்களின் இடத்தில் வேறு எவரையும் அமர்த்தி அழகு பார்க்க கழகத் தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள். அம்மா அவர்களின் மறைவுக்குப் பின் மதிப்புக்குரிய திருமதி வி.கே. சசிகலா அவர்களை பொதுச் செயலாளராக… கழக சட்டதிட்டங்களின்படி புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் வரை நியமிக்கப்பட்டாலும், அசாதாரண சூழ்நிலையின் காரணமாக அவரால்…செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளதாலும்… பல்வேறு நபர்கள் அவரது நியமனத்தை ரத்து செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாலும் அம்மா அவர்கள் நியமித்த தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்றுகூடி கழகத்தையும் ஆட்சியையும் நடத்துகிறோம்’’ என்கிறது இன்றைய செய்திக் குறிப்பு.
இதை சுட்டிக்காட்டி,
’’ஆக தினகரன் மீதிருக்கும் கோபத்தை சசிகலா மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தவில்லை. ஆக தன்னை முதல்வர் பதவியில் அமர வைத்தவர் என்ற அடிப்படையில் சசிகலா மீது எடப்பாடி பழனிச்சாமி இன்னும் கொஞ்சம் சாஃப்ட் கார்னரோடுதான் இருக்கிறார்’’ என்று முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர் ஓ.பன்னீர் ஆதரவாளர்கள்.
ஆனால் எடப்பாடி தரப்பிலோ, ‘’இப்போது நமக்கு பிரச்னை தினகரன் தான். சசிகலா சிறையில் இருக்கிறார். மேலும் அவரால் இனி ஆறாண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது. எனவே தினகரனை ஒதுக்கிவைத்துவிட்டு இணைவோம்’’ என்று இதற்கு விளக்கம் வேறு கொடுக்கிறார்கள்.�,