lகுப்பையாகும் பூமி: பிளாஸ்டிக் Vs டி-ஷர்ட்!

Published On:

| By Balaji

மரிய பனி மோனிஷா.ப

பிளாஸ்டிக் பொருட்களால் இந்தப் பூமிக்கு ஏற்படும் கேடு பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால், டி-ஷர்ட் போன்ற ஆடைகள் பிளாஸ்டிக்குக்குப் போட்டியாக பூமியை நாசப்படுத்திவருவது உங்களுக்குத் தெரியுமா?

நாம் தூக்கி எறியும் பாலீதின் பைகள், நொறுக்குத் தீனி பைகள் உள்ளிட்டவை பூமியை ஆக்கிரமித்துக்கொண்டு கரியமில வாயுவின் அளவை அதிகரித்து வளிமண்டலத்தின் வெளியைச் சூடாக்கிவருகின்றன. பிளாஸ்டிக்குக்கு அடுத்தபடியாக பூமியை அசுத்தம் செய்வதில் டி-ஷர்ட் போன்ற துணி வகைகள் முன்னிலை வகிக்கின்றன.

திங்க் டேங்க் எல்லேன் மேக் ஆர்தர் அறக்கட்டளையின் சார்பில் ‘ஏ நியு டெக்ஸ்டைல்ஸ் எக்கானமி’ இதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் தொழிற்சாலைக்கு அடுத்தபடியாக அதிக மாசு ஏற்படுத்தும் தொழில் டி-ஷர்ட் தயாரிப்பு. துணிகளைப் பயன்படுத்திய பிறகு தூக்கி எறியும் வகையில் அமைந்திருப்பது சுற்றுச்சூழல் பாதிப்பையும், பொருளாதார அளவில் குறிப்பிட்ட இழப்பையும் ஏற்படுத்தும் என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு விநாடியும் ஒரு குப்பை வண்டி அளவுக்கான துணிக் குப்பைகள் நிலத்தை ஆக்கிரமிக்கின்றன அல்லது எரிக்கப்படுகின்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடரும்பட்சத்தில் 2050ஆம் ஆண்டில் ஃபேஷன் தொழில், உலகத்தின் கார்பன் பட்ஜெட்டில் கால்பகுதியை எட்டிவிடும்.

நமது அத்தியாவசியத் தேவை, தேவையைத் தாண்டிய விருப்பங்கள், தள்ளுபடி, பண்டிகைகள், ஃபேஷன் ஆர்வம், நண்பர்களைப் பார்த்து எனப் பல்வேறு காரணங்களுக்காக ஆடைகளை வாங்குகிறோம். இவற்றில் பல ஆடைகளைப் பலரும் ஓராண்டுக்கு மேல் அணிவதில்லை. சிலர் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் அணிகிறார்கள். பிறகு அவற்றை ஓரங்கட்டிவிட்டு மீண்டும் ஆடைகளை வாங்குகிறார்கள்.

இப்படிக் கழித்துக்கட்டப்படும் ஆடைகளில் சில பிறருக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன்படுகின்றன. சில குப்பைகளாகின்றன. ஆடைகளுக்கென்று தனியான குப்பைக் கிடங்கு என எதுவும் இல்லை. அவை ஆறுகளில், கிணற்றில், வெற்று நிலங்களில் கொட்டிவிடப்படுகின்றன. மக்காத இந்தக் குப்பைகளால் நிகழவிருக்கும் ஆபத்தை அறியாமல் அவை தூக்கி எறியப்படுகின்றன. இவற்றால் உமிழப்படும் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் தங்கிவிடுகிறது.

**ஒரு டி-ஷர்ட் தயாரிக்க இவ்வளவு நீரா?**

ஓர் ஆடை அவ்வளவு எளிதில் தயாராகிவிடுவதில்லை. ஒரு டி-ஷர்ட் அல்லது ஜீன்ஸ் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் செலவிட்டுத் தயாரிக்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒரு டி-ஷர்ட்டுக்குக் குறைந்தபட்சம் 2,770 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இது ஒரு மனிதனின் வாழ்நாட்களில் 900 நாட்கள் (கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு) அருந்தக்கூடிய நீரின் அளவு. ஒரு ஜீன்ஸ் தயாரிக்க 10,000 லிட்டர் தண்ணீர் செலவாகிறது.மேலும், இந்த துணிக் குப்பைகளால் பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடு வளி மண்டலத்தில் அதிகரிக்கிறது. இது போன்ற வாயுக்களினால் தான் பூமி வெப்பமாதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. யுனைடெட் நேஷன்ஸ் கிளைமெட் சேஞ்ஜ், இது பற்றிக் கூறும்போது, “பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தில் 10% ஃபேஷன் தொழிலினால் உருவாகிறது” என்கிறது. நேச்சர் மேகசின், “ஒரு பாலியெஸ்டர் டி-ஷர்ட் 5.5 கிலோ கார்பன் டை ஆக்சைடை (Co2) வெளியேற்றுகிறது. பருத்தி ஆடை 2.1 கிலோ அளவு வரையில் வெளியேற்றுகிறது” என்று குறிப்பிடுகிறது. கார்பன் டை ஆக்சைடு 30 முதல் 95 ஆண்டுகளும், நைட்ரஸ் ஆக்சைடு 114 ஆண்டுகளும் வளிமண்டலத்தில் நீடித்து, நிலைத்திருக்கும்.

தொழிற்புரட்சி காலகட்டத்திற்கு முன்பு இருந்ததைவிட தற்போது பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் கூடியுள்ளது. அந்தக் காலகட்டத்திற்குப் பிறகு கடல்களில் அமிலத்தன்மை 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மனிதர்களால் உருவாக்கப்படும் கார்பன் டை ஆக்சைடைக் கடல்கள் உள்வாங்கிக்கொள்வதுதான் இதற்குக் காரணம். பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும்போது பல்வேறு காலநிலை மாற்றங்களை பூமி சந்திக்க வேண்டிவரும். இதனைச் சரிசெய்ய 2035ஆம் ஆண்டுக்குள் 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குச் செலவாகும்.

ஒருவேளை சரி செய்ய முடியாமல் வெப்பநிலை அதிகரித்தால் கடல் அமிலத்தன்மை இன்னும் வெகுவாக அதிகரிக்கும். அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றை விளைவிக்கும் திறன் பாதிக்கப்படும். கடலடி பவளப் பாறைகள் அழியும். உலகக் கடல் மட்டம் 10 செமீ உயரும். இதனால் கோடிக்கணக்கான மக்கள் வெள்ள பாதிப்பைச் சந்திக்க நேரும் எனச் சர்வதேச அமைப்பின் பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளிடை குழு தெரிவிக்கிறது. காலநிலை மாற்றத்தால் அதிகமான பொருளாதாரப் பாதிப்புகளைச் சந்திக்கும் நாடுகளில் முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா ஆகியவை உள்ளன.

ஏற்கனவே கை மீறிப் போய்விட்ட இந்தச் சூழ்நிலையை ஓரளவேனும் சரிசெய்ய வேண்டுமென்றால் தேவையைக் குறைத்துக்கொண்டு நுகர்வைக் குறைப்பதும் மரங்களை வளர்ப்பதுமே ஆகும். தேவைக்கு அதிகமாக ஆடைகள் வாங்குவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஓர் ஆடையின் ஆயுள் காலத்தை முடிந்தவரை நீட்டிக்கலாம். ஆடைகளைத் தூக்கிப் போடுவதற்குப் பதிலாகப் பிறருக்கு வழங்கலாம். இதனால், தூக்கி எறியப்படும் குப்பைகளின் அளவை குறைக்க முடியும். இப்போதிருக்கும் நிலைமை இன்னும் மோசமாக மாறாமல் இருக்க இது உதவும். பூமியைக் காப்பாற்ற நம்மால் முடிந்த எதையேனும் செய்ய வேண்டும் என்றால், நமது நுகர்வைக் குறைக்கலாம். அதிக நீரை விழுங்கும் ஆடையிலிருந்து அதைத் தொடங்கலாம்.

**

மேலும் படிக்க

**

**

[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)

**

**

[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)

**

**

[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)

**

**

[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)

**

**

[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share