Lகிழமைகள், மாதங்கள், தேதிகள்…

Published On:

| By Balaji

ஒரு சொல் கேளீரோ! – 33: அரவிந்தன்

கிழமைகள், மாதங்கள், தேதிகள், ஆண்டுகள் ஆகியவற்றை எப்படி எழுதுவது என்று பார்ப்போம்.

கிழமைகள்:

ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை என்று கிழமைகளை எழுதும்போது இடைவெளி இல்லாமல் ஒரே சொல்லாக எழுத வேண்டும்.

திங்கள், புதன், ஞாயிறு என்று சுருக்கமாகவும் எழுதலாம்.

மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.

ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் நெடில் இருப்பதைக் கவனிக்கவும்.

ஆகஸ்ட் என எழுதும்போது ஆகஸ்டு என்று சிலர் எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் T என முடியும் சொற்களை ட் எனவும் D என முடியும் சொற்களை டு எனவும் தமிழில் எழுதலாம். இது உச்சரிப்பு தொடர்பான அழுத்தத்தைக் குறிக்கும்.

Mist என்பதை மிஸ்ட் எனவும் Missed என்பதை மிஸ்டு எனவும் எழுதலாம்.

Department, street, secret, perfect, concrete, plate முதலான சொற்களைத் தமிழில் எழுதும்போது ட் என்னும் எழுத்தில் முடிக்கலாம். டிபார்ட்மென்ட், ஸ்ட்ரீட், பர்ஃபெக்ட், காங்க்ரீட், பிளேட்,

Blade, mode, pad, grade முதலான சொற்களைத் தமிழில் எழுதும்போது டு என்னும் எழுத்தில் முடிக்கலாம். பிளேடு, மோடு, பேடு, கிரேடு…

வழக்கம்போலவே இதற்கும் விதிவிலக்குகள் இருக்கின்றன. நிலைபெற்ற வழக்குகளை அப்படியே விட்டுவிடலாம். பொதுவாகப் பார்க்கும்போது இந்த விதியைக் கடைப்பிடிக்கலாம்.

தேதிகள்:

கட்டுரை அல்லது செய்தியில் தேதிகளை எழுதும்போது கூடியவரையில் எண்களை மட்டும் வைத்து எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். 18.08.2018 என்று எழுதும்போது எந்த மாதம், எந்த ஆண்டு என்பவை உடனடியாகக் கவனத்துக்கு வராது.

ஆண்டுகள், தேதிகளை எண்ணில் எழுதலாம். மாதங்களை எழுத்தில் எழுதலாம். இது வாசிப்புக்கு எளிதாக இருக்கும்.

நடப்பு மாதமாக இருந்தால் ஆகஸ்ட் 18 அன்று என எழுதலாம்.

இந்த ஆண்டின் கடந்துபோன மாதங்களைச் சேர்ந்த நாளாக இருந்தால்,

கடந்த ஜூலை 18 அன்று என எழுதலாம்.

நடப்பு ஆண்டின் ஜூலை மாதம் 18ஆம் தேதி எனவும் எழுதலாம்.

கடந்த ஆண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடும்போது கடந்த ஆண்டு என்று போடுவதைக் காட்டிலும் ஆண்டினை நேரடியாகக் குறிப்பிட்டுவிடலாம். இந்தக் கட்டுரை அல்லது செய்தியை யாரேனும் ஓராண்டு அல்லது ஒரு சில ஆண்டுகள் கழித்துப் படித்தால் கடந்த ஆண்டு என்பது எதைக் குறிக்கிறது என்பதை அறிய அவர் நமது இதழின் தேதியைப் பார்க்க வேண்டியிருக்கும். ஆண்டை நேரடியாகக் குறிப்பிட்டுவிட்டால் அந்தச் சிக்கல் இருக்காது.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி என்று எழுதலாம்.

கடந்த ஆகஸ்ட் என்று எழுதுவதுபோல கடந்த 2017 என எழுத வேண்டாம். ஏனெனில், வரலாற்றில் பல ஆகஸ்ட் மாதங்கள் உள்ளன. ஆனால், ஒரே ஒரு 2017தான் உள்ளது (கிமு, கிபி என்று பிரித்தாலொழிய). எனவே வெறுமனே 2017 என்று போட்டால் போதும்.

கடந்தாண்டு, இந்தாண்டு எனச் சேர்த்து எழுதுவதைத் தவிர்க்கலாம். கடந்த ஆண்டு, இந்த ஆண்டு என எழுதுவது வாசிப்புக்கு எளிதாக இருக்கும்.

***

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**

**[மாசெக்களுக்கு தெரியாமல் உதயநிதி நடத்தும் புது ஆபரேஷன்!](https://minnambalam.com/k/2019/07/18/45)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share