நோயை எதிர்க்கும் வடை!
ஆஞ்சநேயருக்குச் சார்த்தப்படும் வடை மாலை ஸ்பெஷலானது. மிளகுடன் அரைக்கப்பட்ட உளுந்துடன் நடுவில் ஓட்டையுடன், வட்டமான ‘சில்லு’களாகத் தட்டப்படும் இந்த மிளகு வடை ஆரஞ்சு நிறத்தில் கரகரவென்று வாயில் போட்டதும் ஆஞ்சநேயரை நினைக்கவைக்கும். எளிதாக ஜீரணமாகக்கூடிய சத்துகள் நிறைந்த இந்த வடையை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
**என்ன தேவை?**
உளுந்து – 250 கிராம்
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
கல் உப்பு – தேவையான அளவு
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
**எப்படிச் செய்வது?**
உளுந்தைத் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். தண்ணீரை வடிகட்டி, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். இதில் லேசாகத் தண்ணீர் தெளித்து மிளகு, உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அதோடு அரிசி மாவைக் கலந்துகொள்ளவும். இலையில் சிறிது எண்ணெய் தடவி, சிறிதளவு மாவெடுத்து, மெல்லிய தட்டை போல வடையாகத் தட்டி நடுவில் துளை இடவும். அதை எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
வடை எவ்வளவுக்கு எவ்வளவு மெல்லியதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆஞ்சநேயருக்கு மாலையாகச் சாத்தும்போது வளைந்து கொடுக்கும்.
**என்ன பலன்?**
கால்சியம், பாஸ்பரஸ் அதிகமுள்ள மிளகு, வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. உளுந்து சேர்ந்த இந்த மிளகு வடை, குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும்; எலும்புகள் வலுப்பெறும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.�,