குடும்பத்தில் உள்ள அனைவரின் விருப்பத்தையும் பூர்த்தி செய்வது என்பது கம்பி மேல் நடப்பது போன்ற கலை. அதைச் சமாளித்துவிட்டாலும், அதற்கான முயற்சி, சில சமயங்களில் அயர்ச்சியில் ஆழ்த்திவிடும். ‘சமையலறை வேலையைக் கொஞ்சமாவது எளிமைபடுத்திக்கொள்ள முடியுமா?’ என்று ஏங்குபவர்கள் பலர். அவர்களுக்கு உதவும் வகையில் வீட்டில் இருக்கும் அல்லது கடைகளில் உடனே வாங்கக்கூடிய தட்டையை அடிப்படையாக வைத்து இந்த வித்தியாசமான தட்டு வடையைச் செய்து அசத்தலாம்.
**என்ன தேவை?**
தட்டை – 10
கேரட் துருவல், பீட்ரூட் துருவல் – தலா கால் கப்
தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை ஒன்றாகச் சேர்த்துத் தண்ணீர்விட்டு மிக்ஸியில் சட்னியாக அரைத்தெடுக்கவும். கேரட் துருவலுடன் பீட்ரூட் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு தட்டையின் மீது சட்னியைத் தடவவும். அதன் மீது சிறிதளவு காய்கறி கலவையை வைத்து மற்றொரு தட்டையால் மூடிப் பரிமாறவும்.
**சிறப்பு**
மாலை நேரச் சிற்றுண்டியாகப் பயன்படுத்தலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
[நேற்றைய ரெசிப்பி: மசாலா கொழுக்கட்டை](https://minnambalam.com/k/2019/10/07/6)�,